கோவை சரவணம்பட்டி அருகே ஓரினச்சேர்க்கைக்கு வரவழைக்கப்பட்ட ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் 30 என்பவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், இவர் ஒரு கிாிண்டர் செயலி மூலம் ராக்கி என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் செயலி மூலம் நன்கு பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட தியாகராஜனை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறி ராக்கி என்பவர் கோவை, சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள இடத்திற்கு வர சொல்லியுள்ளார்.
இதையடுத்து, ராக்கி சொன்ன இடத்திற்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சென்ற தியாகராஜனை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டி தியாகராஜன் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்க செயின் மற்றும் 2 கிராம் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தியாகராஜன் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போன் செயலியில் ராக்கி என்ற பெயரில் பேசிய நபர் போலியானவர் என்பது தெரியவந்தது. மேலும், செல்போன் செயலியில் ராக்கி என்ற பெயரில் பேசிய நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பதும் இவரது நண்பர்களான திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (23), திருச்சி துறையூரை சேர்ந்த அபிராம் (19), கொடைக்கானல் ஊரல் பட்டியை சேர்ந்த ஹரிவிஷ்ணு (21) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் இணைந்து செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் நபர்களை தனி இடத்துக்கு வர சொல்லி, வருபவர்களிடம் உள்ள நகை பணம் ஆகியவற்றை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”