INX Media case, P.Chidambaram may get one time house food: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஏதாவது ஒருவேளை மட்டும் வீட்டு உணவு அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது ஜோர் பாக் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு முன்பு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் சார்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சிறப்பு நீதிபதி அஜய் குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், சி.பி.ஐ. ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரியது.
சி.பி.ஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை வருகிற அக்டோபர் 17 ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டனர். அதுவரையில் அவரை திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கவும் உத்தரவிட்டனர்.
விசாரணையில், ப.சிதம்பரம் தனது உடல்நல மருத்துவப் பிரச்னைகளைக் காரணம் காட்டி திஹார் சிறையில் வீட்டில் சமைத்த உணவு வேண்டி அனுமதி கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், ப.சிதம்பரத்துக்கு தினமும் ஏதாவது ஒருவேளை வீட்டு உணவை வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர். ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கவிஞர் வைரமுத்து மற்றும் பேராயர் எஸ்றா சற்குணம் இருவரும் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, ப.சிதம்பரத்துக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறொம் என்று கூறினார்.