சி.எஸ்.கே வீரர்கள் செவ்வாய்கிழமை சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் கருப்புப் பட்டை அணிய மாட்டார்கள். ரஜினிகாந்த் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்த சீஸனில் நடத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம் வலுப்பெற்றிருக்கும் சூழலில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் என பலவேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன.
ஐபிஎல் நிர்வாகம் அந்த கோரிக்கைகளை நிராகரித்தது. சென்னையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா இன்று (ஏப்ரல் 9) அதிகாரபூர்வமாக அறிவித்தார். கிரிக்கெட் போட்டிக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார். மைதானத்திற்குள் நுழையும் ரசிகர்கள் செல்போன், கார் சாவி, கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றை எடுத்து வரக்கூடாது என சேப்பாக்கம் மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தபடி காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி சி.எஸ்.கே. வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆடுவார்களா? என சி.எஸ்.கே. பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியிடம் இன்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அணி நிர்வாகம்தான் பதில் அளிக்கும்’ என்றார்.
சி.எஸ்.கே. தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் தரப்பில் நிருபர்கள் கருத்து கேட்டபோது, ‘வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆடமாட்டார்கள். நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறோம். இதில் அரசியலை கலக்க வேண்டாம்’ என பதில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலமாக காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் உள்ளிட்ட யார் வைத்த கோரிக்கையையும் ஐபிஎல் நிர்வாகமோ, சிஎஸ்கே நிர்வாகமோ ஏற்க தயாரில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.