scorecardresearch
Live

Tamil News Update: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது!

Tamil Nadu News, Tamil News , Petrol price Today, IPL 2022, Eid al fitr 2022, Akshaya tritiya 2022- 03 May 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Update: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது!
Tamil News Headlines LIVE

தமிழகத்தில் தினசரி வெயிலின் தாக்கம் 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய நிலையில், 25 நாட்கள் வரும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.

Tamil Nadu news live update

கத்தரி வெயில் தொடக்கம்!

வேலூரில் வரும் மே 4 முதல் கத்தரிவெயில் தொடங்க உள்ள நிலையில், காலை 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள்,நோயாளிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது!

திருப்பூரில் நூல் விலை உயர்வு காரணமாக, வரும் மே16 முதல் மே21 வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என பின்னலாடை தொழில் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:34 (IST) 3 May 2022
பொதுத் தேர்வு எழுதும் பொழுது மாஸ்க் கட்டாயம் கிடையாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “நாளை மறுநாள் (மே 5) பொதுத் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேர்வு எழுதும்போது முகக்கவசம் கட்டாயம் கிடையாது. மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அணியலாம்” என்று தெரிவித்துள்ளார்.

22:28 (IST) 3 May 2022
ஆரம்பப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து நாளை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

20:52 (IST) 3 May 2022
உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தற்போதைய நெருக்கடியை தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதையை பின்பற்றுமாறு செவ்வாய்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோபன்ஹேகனில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் நம்பிக்கை தெரிவித்தார். ஃபிரடெரிக்சன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் “இந்தப் போரை நிறுத்தவும், கொலைகளை நிறுத்தவும்” கேட்டுக் கொண்டார்.

இந்தியாவும் டென்மார்க்கும் தங்கள் வணிக உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பசுமைத் துறைகள் டேனிஷ் நிறுவனங்களுக்கு பெரும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் என்று கூறினார்.

20:31 (IST) 3 May 2022
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பொருளுதவி செய்யுங்கள் – சீமான் வேண்டுகோள்

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள், உலர் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாதக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி தங்களது பங்களிப்பை செலுத்துங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

19:00 (IST) 3 May 2022
சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் மரணம் – கொலை வழக்குப்பதிவு

சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜி (45) என்பவர் மரணம் அடைந்த விவகாரத்தில், உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கொலை வழக்காக மாற்றி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடிவருகின்றனர்.

18:15 (IST) 3 May 2022
பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை – அரசு தேர்வுகள் இயக்குநர்

பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள், தேர்வர்கள் செல்போன் எடுத்துவர தடை, தேர்வு மையத்தில் தேர்வர்கள், ஆசிரியர்கள் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப்டும் அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

17:21 (IST) 3 May 2022
நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் – ஸ்டாலின்

நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சார்பில் உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

16:29 (IST) 3 May 2022
இந்திய பேசுபவர்கள் நல்லவர்கள் – நடிகை சுஹாசினி

தமிழகத்தில் இந்தி மொழி தொடர்பான சர்ச்சை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில். இந்திய மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும். இந்திய பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் நடிகை சுஹாசினி கூறியுளளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

15:33 (IST) 3 May 2022
ஜூஸ் வாங்கி குடித்த 18 பேருக்கு வந்தி மயக்கம் – போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடவு பணியில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் உட்பட உள்ளூர் கடையில் ஜூஸ் வாங்கி குடித்த 24 பேரில் 18 பேர் வாந்தி, மயக்கத்தால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

15:19 (IST) 3 May 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

வரைவு காசோலைகளை மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கலாம் என்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80Gன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

15:16 (IST) 3 May 2022
நாளை மறுநாள் உணவகங்களுக்கு காலை மட்டும் விடுமுறை

சென்னையில் வணிகர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் உணவகங்களுக்கு காலை மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஓட்டல்கள் சங்கம் செயலாளர் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்

14:52 (IST) 3 May 2022
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை – சுகாதாரத்துறை

நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

14:46 (IST) 3 May 2022
இலங்கைக்கு உதவிட நிதியுதவி வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குங்கள் என மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

14:35 (IST) 3 May 2022
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3 யூனிட்களில் உற்பத்தி நிறுத்தம் – செந்தில் பாலாஜி விளக்கம்

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்

14:32 (IST) 3 May 2022
6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் பகுதியில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

14:29 (IST) 3 May 2022
சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக திகார் சிறை ஏ.எஸ்.பி. கைது

சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக திகார் சிறை ஏ.எஸ்.பி. பிரகாஷ் சந்த்தை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் வசதிகளை செய்து தந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

14:17 (IST) 3 May 2022
7 மாவட்டங்களில் மே 5ல் கனமழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மே 5ல் கனமழைக்கு வாய்ப்பு என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே7ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

14:01 (IST) 3 May 2022
சாத்தான்குளம் கொலை வழக்கு; முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிபதிக்கு கடிதம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், மதுரை சிறையில் காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

13:46 (IST) 3 May 2022
சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம்; மருத்துவகல்வி இயக்குனர் விளக்கம்

கொரோனாவுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சி என்பதால் அவசர கதியில் தவறு நடந்துள்ளது. கல்லூரி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட யாரிடமும் ஆலோசிக்காமல் உறுதிமொழி வாசித்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவ கல்லூரிகளில் இப்போகிரேடிக் உறுதிமொழிதான் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பரிந்துரைத்தால் மீண்டும் ரத்தினவேலை கல்லூரி முதல்வராக நியமிக்க வாய்ப்புகள் ஏற்படலாம் என சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு விளக்கம் அளித்துள்ளார்

13:30 (IST) 3 May 2022
சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம் – முதற்கட்ட விசாரணை நிறைவு

சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வரிடம், முதற்கட்ட விசாரணை நடந்துள்ளது, தேவைப்படும் பட்சத்தில் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்

13:17 (IST) 3 May 2022
ராகுல் காந்தி கலந்துக் கொண்டது திருமண நிகழ்வு- காங்கிரஸ் விளக்கம்

ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டதாக வீடியோ வெளியான நிலையில், ராகுல் காந்தி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார். மேலும், திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என்று வருங்காலத்தில் பாஜக அறிவிக்கக்கூடும் என்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்

12:56 (IST) 3 May 2022
இரவு நேர கஸ்டடி விசாரணை கூடாது – டிஜிபி சுற்றறிக்கை

கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும். இரவு நேர கஸ்டடி விசாரணை கூடாது என அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சுற்றறிக்கை

12:44 (IST) 3 May 2022
சாத்தான்குளம் வழக்கு – நீதிபதிக்கு கடிதம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கடிதம். தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு ஸ்ரீதர் கடிதம்

12:24 (IST) 3 May 2022
பைக் வாங்கி தர மறுத்ததால் இளைஞர் தற்கொலை

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் இருசக்கர வாகனம் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

12:00 (IST) 3 May 2022
போதை மறுவாழ்வு மையத்தில் சந்தேக மரணம் – போலீஸ் விசாரணை

சென்னை, ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ராஜ்(45) என்பவர் உயிரிழப்பு. மறுவாழ்வு மைய ஊழியர்கள் மோகன், ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை

11:44 (IST) 3 May 2022
உயிரைக் கொடுத்தாவது பிரவேசத்தை நடத்துவோம் – மதுரை ஆதீனம்

500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. ஆளுநர் விவகாரம்தான் நிகழ்ச்சி ரத்துக்கு காரணம். உயிரைக் கொடுத்தாவது, தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என மதுரை ஆதீனம் அறிவிப்பு

11:37 (IST) 3 May 2022
சென்னையில் போக்குவரத்து விதிமீறல் – 607 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் நேற்று ஒரே நாளில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன், மியூசிக்கல் ஹார்ன், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் ஆகியன பொருத்தியிருந்த 607 நபர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

11:07 (IST) 3 May 2022
சின்னக் கலைவாணர் விவேக் சாலை

நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலை சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. சாலையின் பெயர் பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

10:58 (IST) 3 May 2022
சின்னக் கலைவாணர் விவேக் சாலை!

நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலை “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையின் பெயர் பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

10:56 (IST) 3 May 2022
ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

மதுரை மருத்துவக் கல்லூரியில், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காததே சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு முக்கிய காரணம். மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

10:46 (IST) 3 May 2022
மேலும் 2,568 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 2,568 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,911 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் 19,137 பேர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

10:45 (IST) 3 May 2022
தங்கம் விலை குறைவு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 38,528க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:39 (IST) 3 May 2022
மின் உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில், இப்போது சுமார் 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே அனல் மின்நிலையத்தில் கையிருப்பு உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில், மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

10:20 (IST) 3 May 2022
பள்ளி பாடப்புத்தகங்களில் மாற்றம்!

தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ‘மத்திய’ அரசு என்ற வார்த்தையை ‘ஒன்றிய’ அரசு என மாற்றவும், ஆளுநர் அதிகாரம் குறித்து இடம் பெற்றிருக்கும் பாடத்திட்டங்களில் சில திருத்தங்கள் செய்து புதிய புத்தகங்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

09:40 (IST) 3 May 2022
பொதுதேர்வு.. தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு!

10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வின் போது, தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுதேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்யவும், மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனே மாற்று வசதி ஏற்படுத்த தயார் நிலையில் இருக்கவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

09:22 (IST) 3 May 2022
ரம்ஜான் பண்டிகை.. தலைவர்கள் வாழ்த்து!

இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் ரம்ஜான் வாழ்த்து!

09:21 (IST) 3 May 2022
ரம்ஜான் பண்டிகை.. ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை நேரத்தில் நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்- ஆளுநர் ஆர்.என்.ரவி ரம்ஜான் வாழ்த்து!

09:19 (IST) 3 May 2022
முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு வாழ்த்துகள்–முதல்வர் ஸ்டாலின்!

09:18 (IST) 3 May 2022
ரம்ஜான் பண்டிகை.. கமல்ஹாசன் வாழ்த்து!

ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்!

08:38 (IST) 3 May 2022
ரஷ்ய ரோந்து கப்பல் அழிப்பு!

கருங்கடலில் ஸ்மினி தீவு அருகே ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை தாக்கி அழித்துள்ளதாக, உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

08:27 (IST) 3 May 2022
திருவண்ணாமலை கோவில் உண்டியல் வசூல்!

சித்திரை மாத பௌர்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியலில் ரூ. 1.33 கோடி, 290 கிராம் தங்கம் காணிக்கை வசூல் வந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Web Title: Ipl 2022 eid al fitr 2022 akshaya tritiya today gold rate in chennai