ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இருந்து தப்ப வைக்க லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்தீதிமன்றம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் சிக்கிய கவுதம் சந்த் நிமானி, உத்தம் சி.ஜெயின் உள்ளிட்ட நான்கு பேரை, விடுவிப்பதாக கூறி, மகேந்திர சிங் ரங்கா, நேமி சந்த் உள்பட நான்கு பேர், 1.35 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர். அத்தொகையில் 60 லட்சம் ரூபாயை, சூதாட்ட வழக்கை விசாரித்த அப்போதைய க்யூ பிராஞ்ச் (Q Branch) எஸ்.பி. சம்பத் குமாருக்கு வழங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.இது தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்பட நான்கு பேருக்கு எதிரான லஞ்ச வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், லஞ்ச பணத்தை எவரும் வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்வதில்லை, மேலும் இவரின் பணி நேர்மை குறித்து சந்தேகப்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ கண்டுபிடித்த ஆதாரங்கள் அனைத்தும் மனுதாரரை இந்த வழக்கில சிக்க வைக்கும் நோக்கில் புனையப்பட்டது என்று கூற முடியாது.
இந்த வழக்கில் சில சட்டமீறல்கள் இருப்பதாக கூறி வழக்கின் ஒட்டுமொத்த நடைமுறையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். மேலும் மனுதாரர் தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் எடுத்து வைத்த வாதங்களை விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்கலாம், எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.