ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி அவர்களை பல வகையிலும் மோசடி செய்வது தொடர்ந்து நடக்கிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலரது நடவடிக்கைகள் இருப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பேசி உள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது லேப்டாப் மற்றும் செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அந்த அறையில் இருந்த 7 இளைஞர்களை சுற்றிவளைத்து பிடித்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள், ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல் ஜடேந்திரா, விபின் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம், 2 கார்கள், 2 பைக்குகள்,12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.