ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாக ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. சாட்சி விசாரணை 28-ம் தேதி தொடங்கும்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 13 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்துக்கு முன்னதாகவே கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதை தமிழக ‘க்யூ’ பிரிவு போலீசார் கண்டுபிடித்து 21 பேரிடம் விசாரணையும் நடத்தினர்.
சென்னை க்யூ பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார், போலி பாஸ்போர்ட் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தியபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பிருப்பதை முதலில் கண்டுபிடித்தார். இதுபற்றி 2 வாரம் விசாரணை நடத்தி, சூதாட்டத்தில் தொடர்புடைய பலரை கண்டுபிடித்து ஒரு பட்டியலையும் தயார் செய்திருந்தார்.
இதையறிந்த பல புரோக்கர்கள், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மகேந்தர்சிங் ரங்கா என்பவரை அணுகினர். நகைக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்யும் மகேந்தர்சிங் ரங்கா, பல போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். தன்னை அணுகிய புரோக்கர்களிடம் பல லட்சங்களை வசூல் செய்த மகேந்தர்சிங், அதில் சில லட்சங்களை எஸ்.பி. சம்பத்குமாரிடம் கொடுத்து, சிலரை சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பணம் கொடுத்தும் கைதான கவுதம் மோகன், சிபிசிஐடி போலீஸில் புகார் கொடுக்க, மகேந்தர்சிங் ரங்கா சிக்கினார். அவரிடம் நடந்த விசாரணையில் க்யூ பிரிவு எஸ்.பி யாக இருந்த சம்பத் குமார், மகேந்திர சிங் ரங்கா, நேமி சந்த் உள்ளிட்டோரும் 1.35 கோடியைப் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இந்த தொகையில் 60 லட்சத்தை சூதாட்ட வழக்கை விசாரித்த அப்போதைய க்யூ பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத் குமாருக்கு வழங்கியதாக விசாரணையில் கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சம்பத்குமார் மீதான புகாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிரான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ரத்து செய்ய கோரி எஸ்.பி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இவர்களுக்கு எதிரான வழக்கில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரும் நேரில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது. குற்றச்சாட்டு பதிவின் போது தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
பின்னர் உத்தரவிட்ட லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.காஞ்சனா வழக்கின் விசாரணை வரும் 28 ஆம் தேதி தள்ளிவைப்பதாகவும் அன்று முதல் சாட்சி விசாரணை தொடங்குவதாக உத்தரவிட்டு விசாரணை நவம்பர் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.