சிவில் சர்விஸ் தேர்வில் ப்ளூடுத் மூலம் காப்பியடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி ஷபீர் கரீம், டிஸ்மிஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. முறைகேடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர், சபீர் கரீம். கேரளாவைச் சேர்ந்த இவர், மோகன்லால் நடித்த மாநகரம் படத்தைப் பார்த்து, ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டதாக தெரிவித்தார். 2014ம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு எழுதி 112வது இடத்தைப் பெற்று, ஐபிஎஸ் அதிகாரி பதவியை தேர்வு செய்தார். ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, தமிழக போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி சென்னையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். எழும்பூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவர் தேர்வு எழுதிய போது, சிறிய புளுடூத் கருவியை பயன்படுத்தி, ஐதராப்பாத்தில் உள்ள மனைவியிடம் பேசி தேர்வு எழுதியுள்ளார். இதை தேர்வு கண்காணிப்பாளரான, பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உதவி செய்ததாக ஐதராப்பாத்தில் உள்ள அவரது மனைவி ஜாய்ஸி ஜாய், அவரது நண்பர் ராம்பாபு ஆகியோரை கைது செய்தனர். ஐதராபாத்தில் உள்ள வீட்டில் இருந்து, தேர்வில் முறைகேடு செய்யப் பயன்படுத்திய ஐபேட்டை போலீசார் கைப்பற்றினர். அதில் யுபிஎஸ்சி மெயின் தேர்வின் போட்டோ காப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கேரளா பப்ளிக் சர்விஸ் கமிஷன் கேள்விதாள், ஐஎஸ்ஆர்ஓ பணிக்கான தேர்வுக்கான கேள்வி தாள்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் ஐ.எஸ்.ஆர்.ஓ தேர்வில் சபீர் கரீமின் சகோதரி கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அவரும் இது போல தேர்வில் முறைகேடு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
ஐதராப்பாத்தில் சிக்கிய சபீர் கரீம் மனைவி ஜாய்ஸி ஜாய் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சென்னை கொண்டு வரப்பட்டார். அவருடன் அவரது ஒன்றரை வயது குழந்தையும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவில் சர்விஸ் தேர்வில் நடந்த முறைகேடு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து அனைத்து தகவல்களையும் கேட்டு வாங்கி வருகிறது. ‘உங்களை ஏன் பணியில் இருந்து நீக்க கூடாது?’ என்று கேட்டு சபீர் கரீமுக்கு மத்திய உள்துறை அமைச்சர்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சபீர் கரீம் செய்த காரியத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாட்டின் மிக உயர்ந்த பதிக்கான தேர்வில் முறைகேடு நடந்த்தையடுத்து தீவிர நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
மத்தியில் பிஜேபி அரசு பதவி ஏற்ற பின்ன பிட்னெஸ் இல்லாத இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குஷூம் புன்லா, மேற்கு வங்க அதிகாரி குமார் கவுதம் ஆகிய இருவரும் பதவியை 2016ம் ஆண்டு பறிகொடுத்தார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்ட்ரா மாநில ஐபிஎஸ் அதிகாரிக்கு பல முறை பிட்னெஸ் டெஸ்ட்க்கு வாய்ப்புக் கொடுத்தும் அதில் அவர் தேர்ச்சி பெறாததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
சபீர் கரீம் விவாகரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக தலைமை செயலாளரிடம் அறிக்கைக் கேட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா விரைவில் அறிக்கை அனுப்பி வைப்பார் என சொல்லப்படுகிறது.