சென்னையில் நடந்த ஐஏஎஸ் தேர்வில் காப்பியடுத்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். இந்நிலையில் காப்பியடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்ஸ் ஜோ, ஐதராபாத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
யூபிஎஸ்சி எனப்படும் சிவில் சர்விஸ் தேர்வுக்கான மெயின் தேர்வு நாடு முழுவதும் நடந்து வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் இதற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28ம் தேதி தேர்வு நடந்த போது, ஷபீர் கரீம் என்பவர் புளுடூத் மூலம் தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு மையத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதோடு, அவருடைய தேர்வு தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக அவரை போலீசாரிடம் தேர்வு கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.
பிடிப்பட்ட ஷபீர் கரீம், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பது தெரியவந்தது. ஐதராபாத்தில் உள்ள மனைவியிடம் புளூடூத் மூலம் கேள்விகளுக்கான பதிலை கேட்டு தேர்வு எழுதியதும் தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின்னர், ஷபீர் கரீமை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
ஷபீர் கரீம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தேர்வில் காப்பியடிக்க உதவிய அவரது மனைவியை கைது செய்ய நேற்று சென்னை போலீசார் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர். ஐதராபத்தில் தங்கியிருந்த அவரது மனைவி ஜாய்ஸ் ஜோவை, சென்னை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.