தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் குமரி மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “ஜனவரி 21 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜெஸ்லின் மகன் ராஜேஷ் குமார், வயது 37, சின்னமுட்டம் கிராமத்தைச் சார்ந்த செபாஸ்டின் மகன் பிரிட்டோ, சேகர் மகன் செபாஸ்டின், பெரியக்காடு மீனவ கிராமத்தைச் சார்ந்த அந்தோணி மகன் கபிலன், திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் ஊரை சார்ந்த கொர்நெளியஸ் மகன் துரைராஜ் ஆகிய ஐந்து மீனவர்களும் சௌதி அரேபியா நாட்டில் கத்திப் என்ற பகுதியிலிருந்து சௌதி அரேபியா நாட்டில் காலம் ஹஸ்ஸான் என்ற அரேபிய முதலாளிக்கு சொந்தமான "ரஸ்மா அல் அவள்" என்ற விசைப்படகிலே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள்.
மீனவர்கள் ஆழ் கடலிலே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்த நேரத்திலே ஜன.22ஆம் தேதி ஈரான் கடல் கொள்ளையர்கள் சௌதி அரேபியா கடலுக்குள் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரா மாறியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
இந்தத் துப்பாக்கி சூட்டுக்கு பயந்து மீனவர்கள் ஒவ்வொருவரும் படகுகளுக்குள் ஒழிந்து கொண்டார்கள். துப்பாக்கிச் சூடு முடிந்த பின்பு மீனவர்கள் படகுக்கு வெளியே வந்து பார்க்கின்ற பொழுது தங்களோடு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜாக்கமங்கலம்துறையை சார்ந்த ஜெஸ்லின் மகன் ராஜேஷ் குமார், வயது 37, தனது இடது கண்ணில் குண்டடி பட்டும், முகத்தின் காது, தொண்டை பகுதிகளிலே குண்டடி காயங்கள் பட்டு மயங்கி நிலையிலேயே இருந்துள்ளார்.
படகில் இருந்த மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர்லெஸ் அது போன்று மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த செல்போன்கள் அனைத்தையும் ஈரான் கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரை சக மீனவர்கள் மருத்துவமனை சேர்க்குமாறு உடனடியாக தங்கள் விசைப்படகை கரையை நோக்கி செலுத்தினார்.
பின்னர் சௌதி அரேபியா கடலோர காவல் படையினரை உதவிக்கு வருமாறு வயர்லெஸ் மூலம் அழைத்தனர்.
துப்பாக்கிச் சூட்டிலே படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷ்குமார் மீனவரை சௌதி அரேபியா கடலோர காவல் படை கப்பலில் ஏற்றி விரைந்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயப்பட்ட ராஜேஷ்குமார் மீனவர் மௌசட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அறிந்து தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களிலே மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கக் கூடிய சுமார் 6,000-க்கு அதிகமான தமிழ்நாடு, கேரளாவை சார்ந்த இந்திய மீனவர்கள் அனைவரும் தங்கள் உயிருக்கு ஆபத்துக்கள் எந்த நேரமும் ஈரான் கடற்கொள்ளையினால் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பயந்து 23.1.2023 முதல் ஒன்பது நாட்களாக கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை.
தங்கள் உயிருக்கு பாதுகாப்பை சௌதி அரேபியா அரசு உறுதி செய்யும் வரை நாங்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் தரையில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கு முன்பும் கடற்கொள்ளையர்கள் சௌதி அரேபியா கடலுக்குள் வந்து மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதிலே 2000 ஆண்டு மகிமை என்ற குமரி மீனவரும் 2007 ஆம் ஆண்டு மணக்குடியை சார்ந்த பணி அடிமை என்ற மீனவரும் 2010 ஆம் ஆண்டு குறும்பணயை சார்ந்த குமார் என்ற மீனவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இது போன்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடற்கொள்ளையிர்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கடற்கொள்ளையர்கள் ஈரானிலிருந்து சௌதி அரேபியா கடலுக்குள் வந்து மீனவர்களின் மீன்பிடிப் பொருட்களையும் மீனவர்களின் அலைபேசிகளையும் அவர்கள் திருடி செல்வது வழக்கமாக இருக்கின்றது.
இவ்வாறு ஈரான் கடற்கொள்ளையர்கள் திருடி செல்கின்ற பொருட்களுக்கு அரேபியா உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்பதில்லை, மாறாக இந்திய மீனவர்கள் தான் அந்த பொருட்களை தங்கள் ரூபாயிலே வாங்கி மீண்டும் மீன் பிடிக்க செல்ல வேண்டும். தொடர்ந்து கடற்கொள்லையர்களால் இந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு மாதமும் குறைந்தது 5 முதல் 7 முறை கடற்கொள்ளையர்கள் நமது மீனவர்களை சவுதி கடலுக்குள் வந்து தாக்குவது வழக்கமாக உள்ளது.
எனவே இந்திய மீனவர்களை சவுதி அரேபியா அரசு தங்களது நாட்டு முதலாளிகளின் விசைப்படகுகளிலும் வேலைக்கு அமர்த்தி விட்டு மீனவர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் வாழங்காமல் இருப்பது வேதனைக்குரியதாக இருக்கின்றது.
இந்திய அரசு உடனடியாக சவுதி அரேபியா அரசை தொடர்பு கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள 10,000 அதிகமான மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை சௌதி அரேபியா அரசு கடலிலே உறுதி செய்ய வேண்டும் மேலும் துப்பாக்கிச் சூட்டினாலும் தாக்குதனாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உரிய நிவாரணத்தை சவூதி அரேபியா அரசு வழங்க வேண்டும்.
தங்களது உயிருக்கு பயந்து நமது மீனவர்கள் சௌதி அரேபியாவில் மீன்பிடிஇக்க செல்லாமல் கரையில் இருப்பதால் அவர்களது குடும்பங்கள் பசி பட்டினியில் வாட வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே இந்திய அரசு போர்க்கால அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்து சௌதி அரேபியா அரசு மூலம் மீனவர்களுக்கு மீன் பிடிக்கின்ற பொழுது கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்தலை தடுத்து, மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பணியாளர் சர்ச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.