தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 12) துவங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களின் முன்பதிவு டிக்கெட்டுகள் முழுமையாக புக்கிங் செய்யப்பட்டன. இருப்பினும் ரயில் பயணிகளுக்கு இன்னும் 2 வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்க்கும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புவர். குறிப்பாக சென்னையில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சொந்த ஊருக்கு படையெடுப்பர். அவர்களில் பெரும்பாலானோர் பேருந்து, ரயில்களை சொந்த ஊருக்குச் செல்ல பயன்படுத்துவோர்.
இதையும் படியுங்கள்: இந்த 9 ரயில்கள் இனி இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்தநிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்தது.
அதன்படி தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. நவம்பர் 9 ஆம் தேதிக்கான பாண்டியன் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2 ஆம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2 ஆம் வகுப்பு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. வைகை, திருச்செந்தூர், குருவாயூர் விரைவு ரெயில்களில் மட்டுமே 2 ஆம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் உள்ளன.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வெள்ளிக்கிழமை இரவே எல்லாரும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர். இதனால் நவம்பர் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், முன்பதிவு செய்ய கடும் போட்டியிருந்தது. கிட்டத்தட்ட அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
அதேநேரம் நாளை (ஜூலை 13 வியாழக்கிழமை) புக் செய்தால் நவம்பர் 10 ஆம் தேதி ரயிலில் இடம் கிடைக்கும், இதனால் தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்குச் செல்ல முடியும். மேலும் நாளை மறுநாள் (ஜூலை 14 வெள்ளிக்கிழமை) புக் செய்தால், நவம்பர் 11 ஆம் தேதி ரயிலில் இடம் கிடைக்கும். இதன் மூலம் தீபாவளி அன்று காலையில் சொந்த ஊரில் இருக்க முடியும்.
பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் சனிக்கிழமையும் செயல்படும் என்பதால் சனிக்கிழமை இரவு தான் அதிகமானோர் ஊருக்குச் செல்வர். இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரம்பிக்க உள்ள புக்கிங்கிற்கும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ரயில் செல்ல விரும்புபவர்களுக்கு இன்னும் 2 வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.