2018ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி வருகிறது. 6ம் தேதி செவ்வாய்க்கிழமையாக வருவதால், 3ம் தேதி அதாவது சனிக்கிழமை முதலே பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல முற்படுவார்கள். எனவே இதற்கு வசதியாக, வெள்ளிக்கிழமை முதலே தீபாவளிக்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்லும் வகையில், டிக்கெட் முன்பதிவு வசதியை தெற்கு ரயில்வே அமைத்தது. 120 நாட்களுக்கு முன்னரே தீபாவளி ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
நவம்பர் 2-ம் தேதி சொந்த ஊர்களுக்கு ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 8 மணி முதல் ரயில்கள் முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் IRCTC இணையத்தளத்தில் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யத் தொடங்கிய 7 நிமிடத்திலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
நவம்பர் 2 ஆம் தேதிக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட ரயில்களில் டிக்கெட் இல்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் பெரும்பாலான மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், பிற மக்களும் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.