‘உத்க்ரிஷ்ட்’ திட்டத்தில் தமிழகத்தின் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள்: பயணிகளுக்கு 12 புதிய வசதிகள்

Utkrisht scheme in tamil nadu trains: ‘உத்க்ரிஷ்ட்’ திட்டத்தில் தமிழகத்தின் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இணைகின்றன. அவற்றின் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் இனி ஜொலிக்கப்...

Kanyakumari, Muthunagar Express Trains to get utkrisht coaches: கன்னியாகுமரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புதிய வசதிகள் பெறுகின்றன. முறையே கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் இந்த ரயில்களின் பெட்டிகள் உத்க்ரிஷ்ட் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட இருக்கின்றன. இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.

உத்க்ரிஷ்ட் திட்டம்: உத்க்ரிஷ்ட் என்கிற வார்த்தைக்கு சிறந்ததில் எல்லாம் சிறந்தது என அர்த்தம். ரயில்வே வாரியம் இந்தியா அளவில் ரயில்களின் பெட்டிகளை மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றும் திட்டத்திற்கு இந்தப் பெயரை சூட்டியிருக்கிறது. இந்தப் புதிய திட்டத்திற்கான ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாராகின்றன.

இந்த பெட்டிகள் ராஜதானி, சதாப்தி போன்ற அதிக கட்டணம் கொண்ட முன்பதிவு வசதி மட்டுமே உள்ள ரயில்களில்தான் முதலில் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் வசதிகளை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழு, சாதாரண முன்பதிவு அற்ற பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த வசதிகள் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

Utkrisht coaches: Kanyakumari Muthunagar Express Trains to get 12 New Facilities-கன்னியாகுமரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 12 புதிய வசதிகள்

அதைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் உத்கிரிஸ்ட் திட்டத்தை சதாரண பயணிகள் பயணம் செய்யும் ரயில்களிலும் அமைக்கும் பணியை தொடங்கியது. இதன்படி 66 ஜோடி ரயில்கள், அதாவது 146 செட் ரேக்குகள் 2018-19-ம் ஆண்டு நிதி ஆண்டில் மேம்படுத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தபடுகிறது.

இதன்படி முதல் செட் பெட்டிகளை கொண்ட ரயில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு துவங்கிவைக்கப்பட்டது. பல பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் ஒரு ரேக்குக்கு 60 லட்சங்கள் இதற்காக செலவிடப்படுகிறது. இந்த பணிகளை தெற்கு ரயில்வே மண்டலம் மேற்பார்வையில் திருச்சியிலும் , சென்னையிலும் செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உத்க்ரிஷ்ட் பெட்டிகள் கொண்ட முதல் ரயில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி திருவனந்தபுரம்-நிசாமுதீன் மார்க்கத்தில் துவங்கிவைக்கப்பட்டது. ரயில்வே மண்டலம் எந்த ரயில்களுக்கு எல்லாம் இந்த வசதி கொண்ட ரயில்கள் இயக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது. தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது.

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களின் பெட்டிகள் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயங்கிவருகிறது. கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி போன்ற ரயில்கள் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரான சாதாரண நீல நிற ரயில் பெட்டிகள் கொண்டு இயங்கிவருகிறது. தற்போது கன்னியாகுமரி, மற்றும் முத்துநகர் ரயில் உத்க்ரிஷ்ட் ரயில் பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

இந்த மாற்றத்தில் பின்வரும் அம்சங்கள் உண்டு.

1. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
2. ஜிபிஎஸ் வசதி கொண்ட வருகை பதிவேடு செய்யப்பட்டிருக்கும்.
3. குப்பை தொட்டிகள் கழிவறையின் உள்ளேயும், ரயில் பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும்.
4. சுத்தம் செய்யும் நபர் வண்டியில் பயணம் செய்து தேவைக்கு ஏற்ப வண்டி சென்று கொண்டிருக்கும் போது சுத்தம் செய்வார்.
5. ரயில் பெட்டிகளின் தரையில் புதிய பிளாஸ்டிக் தரைதளம் அமைக்கப்பட்டிருக்கும்.
6. இருக்ககைள் கூடுதல் குஸன் சேர்க்கப்பட்டு புதிய உறை பொருத்தப்பட்டிருக்கும்.
7. ரயில் பெட்டிகளின் சுவர் பகுதிகளில் புதிய வண்ணப்படம் ஒட்டப்பட்டிருக்கும்.
8. குளிர்சாதன பெட்டிகளில் புதிய கர்ட்டன் அமைக்கப்பட்டிருக்கும்.
9. ரயில் பெட்டியின் மேல்கூறை உடைந்து இருந்தால் சரிசெய்யப்பட்டு வெள்ளை வண்ணத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கும்.
10. எல்.ஈ.டி விளக்கும் அமைக்கப்பட்டிருக்கும்.
11. ரயில் பெட்டிகளின் வண்ணம் நீல நிறத்திலிருந்து காவி கலந்த நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்
12. பயோ கழிவறை வசதி செய்யப்பட்டிருக்கும்.

மேம்படுத்தப்பட்ட இந்த பெட்டிகளில் பார்வையற்றோர் அறியும் வசதிகள், நவீன கழிப்பறைகளுக்கான பராமரிப்பு பூட்டு, கழிப்பறைகளில் வால்வுகள், சுகாதார அறை, இரவுநேரத்தில் இருக்கைகள் அறியும் ஸ்டிக்கர், புதிய வடிவமைப்பில் குடிநீர் தாங்கி, பெரிய அளவில் முகம்பார்க்கும் கண்ணாடி, புதிய வடிவமைப்பில் தீஅணைப்பான், கழிவறையில் காற்றை வெளியேற்றும் மின்விசிறி, கழிவறையில் குழாய், நறுமணத்துடன் கூடிய காற்று வீசும் மின்கருவி, நறுமணம் வீசும் மெழுகுகட்டை, மேல்இருக்கைக்கு செல்ல வசதியாக புதிய ஏணி, கழிவறைகளுடன் கூடிய குப்பை தொட்டிகள் ஆகிய வசதிகள் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) தரநிலைகளின் படி இந்த வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த பெட்டிகளில் தரைப் பகுதி மாற்றப்பட்டு, ரிசர்வ் பெட்டிகளில் தீ அணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வசதிகளை சுட்டிக் காட்டும் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த வசதி மொத்தம் 640 ரேக்குகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 கோடி செலவில் மாற்றம்செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச்க்குள் 140 ரயில் ரேக்குகளும் மீதமுள்ள 500 ரேக்குகள் மார்ச் 2020க்குள் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: ‘இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இந்த வசதிகளை உடைக்கவோ, பென் பென்சில் போன்றவற்றை கொண்டு சுவரில் எழுதவோ, இருக்கைகளை கிழிக்கவோ, அசுத்தம் செய்யாமல் இருத்தல், சேதாரம் செய்யாமல் கழிவறைகளை உபயோகித்தல், தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும், குப்பைகளை வெளியில் வீசாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும், ரயில்களை நமது உடமையாக நினைத்து பயணம் செய்ய வேண்டும். யாராவது இது போன்று செய்வதாக இருந்தால் உடனடியாக அலைபேசியில் படம் எடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிவிட்டர் மூலமாக தகவல் தெரிவிக்குமாறு’ கேட்டுக் கொண்டார்.

புதிய வசதிகளை பெறுவதில் காட்டும் அக்கறையை, பராமரிப்பிலும் காட்டவேண்டும்தானே?

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close