சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி, பிரபல யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அப்போது, அறுவை சிகிச்சை அறையில் இருந்த இர்ஃபான், அங்கு நடந்த செயல்பாடுகளை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டார். மேலும், மருத்துவர் ஒருவர் இர்ஃபானின் கையில் கத்திரிகோலை கொடுத்து, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட அறிவுறுத்தியதும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியிருந்தன.
இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாள்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகாரளித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இர்ஃபான் தரப்பில் இருந்து மருத்துவத்துறைக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டது.
தற்போது, இச்சம்பவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதியளித்த மருத்துவர் நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“