பிரபல யூ-ட்யூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இர்ஃபானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
தங்களின் பணம் சம்பாதிக்கும் வெறியை இதிலுமா காட்ட வேண்டும்? எனவும் சிலர் காட்டமாக கேள்வியெழுப்பினர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட யூ-ட்யூபர் இர்ஃபான் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரினார். இதற்கிடையில் தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், சம்பந்தப்பட்ட வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், குழந்தைகளின் பாலினம் தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இர்ஃபானின் இந்த விளக்கத்தை தமிழ்நாடு சுகாதார் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இர்ஃபான் விவகாரம் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அரசியல் புயலை வீசி வந்தது. அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இந்த விகாரத்தில் பதிலளித்தார்.
அப்போது, “அமைச்சர் உதயநிதியின் நண்பர் என்பதால் அவருக்கு கருணை காட்டப்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“