/indian-express-tamil/media/media_files/2025/10/16/100-work-2025-10-16-19-15-38.jpg)
100 நாள் வேலைக்கு கருவிழிப் பதிவு கட்டாயம்: ஆள் மாறாட்டம் இனி தடுக்கப்படுமா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகஸ்ட் 23, 2005 அன்று நிறைவேற்றப்பட்டு, 2006 பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.50 முதல் ரூ.326 வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு இந்த தொகை மாறுபடும் நிலையில் தமிழ்நாட்டில் ஒருவருக்கு தற்போது ரூ.319 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.31,900 ஊதியமாக கிடைக்க வழிவகுக்கிறது.
தமிழ்நாட்டில் 85 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1.09 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். 86% வேலை வாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், மொத்த வேலைவாய்ப்புகளில் 29% ஆதி திராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நடைபெறும் ஆள் மாறாட்டங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் மற்றும் அதன் உச்சகட்ட நடவடிக்கையான கருவிழிப் பதிவு (Iris Scan) கட்டாயம் ஆக்கப்பட்டது. இதுகுறித்து காமன் மேன் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பற்றி இங்கே காணலாம்.
முறைகேட்டை தடுக்க அரசாங்கத்தின் தொடர் முயற்சிகள்:
பணப் பட்டுவாடா மாற்றம்: ஆரம்பத்தில் கிராம ஊராட்சியில் பணத்தைக் கணக்கில் வைத்து தலைவர் மூலமாக ஆள் பார்த்துப் பிரித்துக் கொடுத்ததில் ஊழல் மற்றும் பாகுபாடு எழுந்ததால், பயனாளிகள் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்க வழிவகுக்கப்பட்டது.
புகைப்படப் பதிவு: ஆள் மாறாட்டத்தைத் தடுக்க முதலில் குழுப் புகைப்படம் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதில் முறைகேடுகள் தொடர்ந்ததால், பின்னர் காலையிலும் மாலையிலும் புகைப்படம் எடுப்பது கட்டாயப்படுத்தப்பட்டது.
ஜியோ டாக் மூலம் பதிவு: இதற்கு பிறகும் ஆள்மாறாட்டம் தொடர்ந்ததால், வேலையிடத்திலேயே நின்றுகொண்டு, அந்த இடத்தின் லொகேஷன் உடனுடன் (Geo-Tag) கூடிய புகைப்படத்தை செயலி மூலம் பதிவு செய்யும் முறை (ஆதார் இணைப்பு) கொண்டு வரப்பட்டது. ஆனால், ஊழியர்கள் லேப்டாப்பில் இருந்த புகைப்படத்தை அந்த லொகேஷனுக்குக் கொண்டு சென்று மீண்டும் போட்டோ எடுத்துப் பதிவு செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டனர்.
கருவிழிப் பதிவு (Iris Scan) கட்டாயமா?
ஆள் மாறாட்டத்தையும் ஊழலையும் எந்தத் திட்டத்தாலும் தடுக்க முடியாததால், இறுதியாக அரசாங்கம் கருவிழிப் பதிவு (Iris Scan) முறையைக் கொண்டு வந்துள்ளது. தற்போதுள்ள வேலை அட்டை (Job Card)-ஆதார் இணைப்புடன், ஆதார் தரவுத்தளத்தில் ஏற்கனவே உள்ள கருவிழி தகவலை இணைக்கும் பணி நடைபெறுகிறது.
இனிமேல் பணியாளர்கள் வேலை செய்யும் இடத்திலேயே நிற்கும்போது, பணித்தள பொறுப்பாளர் (Field Supervisor) கருவிழிப் பதிவு செயலி மூலம் புகைப்படம் எடுக்கும்போது, அவர்கள் கண்களை மூடித் திறக்கச் சொல்வார்கள். அப்போது பணியாளர்களின் கருவிழி ஸ்கேன் செய்யப்பட்டு, காலையில் அட்டெண்டன்ஸ் பதிவு செய்தவரின் கருவிழியுடன் சரியாகப் பொருந்தினால் மட்டுமே வருகை ஏற்கப்படும். ஒரு ஆள் மாறாட்டம் இருந்தாலும் வருகை நிராகரிக்கப்படும்.
சவால்கள்
எனினும், கிராமப்புறங்களில் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இந்தக் கருவிழிப் பதிவு மற்றும் ஜியோ டாக் போன்றவற்றை மேற்கொள்வது பணித்தளப் பொறுப்பாளர்களுக்குப் பெரிய சவாலாக உள்ளது என்றும், மக்கள் மனமாற்றம் அடையாத வரை ஊழலை முழுமையாக ஒழிக்க முடியாது என்றும் காமன் மேன் யூடியூப் சேனல் சுட்டிக்காட்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.