திருச்சி மாவட்ட வேளாண் துறையில் பணியாற்றிய வேளாண் இணை இயக்குநா் முருகேசன் (ஓய்வு), முன்னாள் வேளாண் துணை இயக்குநா் செல்வம் (ஓய்வு) ஆகிய இருவரும் கடந்த 2021 பிப். 26 முதல் 2023 அக். 30 வரை விவசாயத் துறையின் மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் பண்ணைக் கருவிகள், தாா்ப்பாலின், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் ஆகிய வேளாண் இடுபொருள்களை ரூ.2.25 கோடிக்கு கொள்முதல் செய்தபோது, மாவட்ட அளவிலான கொள்முதல் குழுக்கூட்டம் நடத்தாமலும், கொள்முதல் கமிட்டி தலைவா் (அ) ஆட்சியரின் ஒப்புதல் பெறாமலும், தன்னிச்சையாக சந்தை விலையைவிட அதிக விலைக்கு தரமற்ற உபகரணங்களை கொள்முதல் செய்து, பயனாளிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. சில பயனாளிகளுக்கு பண்ணைக் கருவிகளை வழங்காமல், வழங்கியதாகக் கணக்கு காட்டி அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு ரூ.30 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது.
பண்ணைக்கருவிகள் வாங்கிய 3 ஆயிரத்து 416 பயனாளிகளில் 100 பேரை விசாரித்ததில், 34 போ் பண்ணைக்கருவிகளைப் பெறவில்லை என்பது தெரியவந்தது. இதன்மூலம் 34 பயனாளிகளுக்கான மானியத் தொகை ரூ.52,088 ஐ முறைகேடு செய்துள்ளனா்.
இதுகுறித்து திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் கிழக்கு தெருவை சோ்ந்த அப்துல்லா என்பவர் தொடுத்த வழக்கில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவின்பேரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. மணிகண்டன், ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா், முன்னாள் வேளாண் அலுவலர்கள் முருகேசன், செல்வம் ஆகிய இருவா் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்