நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் அளித்த நிலையில், அதற்கு மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியன்று, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங்கின் மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைபடுத்துவதாக கவிதா சிங்கின் மகள், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பல்ராம் சிங் மற்றும் அவரது தந்தை யுவராஜ் சிங் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, "நாங்கள் எப்போதும் அவர்களுடன் சுமுகமாக போக வேண்டும் என்று தான் நினைத்தோம். இருட்டுக்கடையை யாரும் வாங்க முடியாது. இருட்டுக்கடை அவர்களின் பெயருக்கு மாறி 70 நாட்கள் தான் ஆகிறது. அதற்கு முன்னர் வரை சூரஜ் என்ற பெயரில் தான் அந்த கடை இருந்தது. அந்தக் கடையின் உண்மையான உரிமையாளர் சுலோச்சனா பாய். அவர்கள் இறந்ததற்குப் பிறகு பெயர் மாற்றம் நடந்தது.
அந்த சுலோச்சனா பாய் இவர்களுக்கு கடையை எழுதிக் கொடுத்ததாக கூறுகின்றனர். ஹரிசிங் என்பவர் தான், அந்தக் கடையை நிர்வகித்துக் கொண்டு இருந்தார். அவருமே மர்மமான முறையில் தான் இறந்தார். கடையே அவர்களுக்கு இப்பொழுது தான் வந்து இருக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் வரதட்சணையாக கேட்கவில்லை. அதேபோல திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை. திருமணத்தின் போது அவர்களுடைய மகளுக்காக அவர்கள் ஒரு சூட்கேஸில் நகையை கொடுத்தார்கள் அதில் என்ன இருந்தது என்று கூட எங்களுக்கு தெரியாது. அவர்களின் மகள் சென்ற போது அதையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அந்தப் பெண்ணின் பெயரில் அன்பளிப்பாக கொடுத்த காரும் கூட அவர்களின் வீட்டிலேயே தான் இருக்கிறது.
இருட்டுக்கடையை ஏமாற்றி அவர்களின் கைகளுக்கு கொண்டு சென்றது வெளியே தெரிந்து விடுமோ என்ற எண்ணத்தில் தான் இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் புகாரில் ஆதாரமில்லை. அப்பெண்ணுக்கு வேறு ஆண் நபர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. இதை கேட்டதற்கு இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். அந்தப் பெண்ணுக்கு முதலில் மூன்று இடங்களில் திருமணம் நிச்சயமாகி நின்று போய் விட்டது. இதுவும் திருமணம் நடந்த பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது" எனக் கூறினர்.