சமரசம் ஆனாரா ஓ.பி.எஸ்? அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின் அஜெண்டா என்ன?

ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே அஜெண்டாவாக இருக்கும் என்று தெரிகிறது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவி எதிர்க்கட்சியாக மாறியது. இதையடுத்து, அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடுமையான போட்டி எழுந்தது. கட்சிக்குள் விவாதங்களுக்கு பிறகு, அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் சட்டமன்ற கொறடாவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அதிமுகவில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தைவிட இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிடி வலுவாகவே வலுவாகவே இருக்கிறது. அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் 45க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர். அதே போல, தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களும் முன்னாள் அமைச்சர்களும் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாக்கே ஆதரவாளர்களாக தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் கட்சியில் தனக்கு தனி அதிகாரம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தொடர்ந்து அதிமுக சார்பில் தனியாக அறிக்கை விட்டு வருகிறார். பிரதமருக்கு தனியாக கடிதம் எழுதுகிறார். அதே போல, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகம் என்று குறிப்பிட்டு அதிமுக சார்பில் தனியாக அறிக்கைகளை வெளியிடுகிறார். பிரதமருக்கும் தனியாக கடிதம் எழுதி வருகிறார்.

அதிமுகவில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையே ஒரு பனிப்போர் நடந்துவருகிறது என்று ஊடகங்களில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஈ.பி.எஸ் எங்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மறுத்து வருகிறார்.

அதே நேரத்தில், மற்றொரு புறம் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, அதிமுகவைக் கைப்பற்றும் நோக்கத்தில் அதிமுக தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோ வெளியிட்டு வருகிறார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிகலாவின் ஆடியோ குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா அதிமுகவில் இல்லை. சிலர் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது நடக்காது என்று கூறினார். அதே போல, அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று கூறி ஈ.பி.எஸ்-ஸின் கருத்தை உறுதி செய்தனர்.

அதிமுகவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இன்னும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்ந்தெடுக்கப்படவில்லை. விரைவில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட உள்ளதால், எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடாவை தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று தகவல்கள் வெளியானது. அவர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக தனக்கு முழு அதிகாரம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை வேறு யாருக்காவது கொடுத்தால், அவர்தான் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு அடுத்த இறுக்கையில் அமர வேண்டும். ஓ.பி.எஸ்-க்கு இறுக்கை ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனாலும், ஓ.பி.எஸ் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார்.

கடந்த வாரம், எடப்பாடி பழனிசாமி, சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை. இது ஊடகங்களில் விவாதமானது. ஆனால், அப்போது ஈ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுப்போது ஓ.பி.எஸ் வீடு கிரகப்பிரவேசம் காரணமாகத்தான் ஆலோசனைக் கூட்டத்துக்கு வரவில்லை என்று கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, ஈ.பி.எஸ் ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையே பனிப்போர் இருந்தாலும் இந்த உரசல் மோதலாக வெடிக்கக் கூடாது என்பதில் இருவருமே கவனமாக இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான், ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 14ம் தேதி பகல் 12 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூன் 9) மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் என்று கூறினார்.

இதன் மூலம், ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே அஜெண்டாவாக இருக்கும் என்று தெரிகிறது. இதில் ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஓ.பி.எஸ் சமரசம் செய்து கொண்டதாகவே தெரிகிறது. ஏனென்றால், அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தனியாக அறிக்கை விடுவதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஏற்கெனவே இருவரும் தனியாக அறிக்கை வெளியிட்டு வந்திருக்கிறோம். இது ஒன்றும் புதியதல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல், ஈ.பி.எஸ் தனியாக ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துப் பேசினார். இதனால், ஓ.பி.எஸ் சமரசம் ஆகியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Is ops compromised to accept deputy opposition leader of legislature aiadmk mls meeting on jun 14th

Next Story
தமிழகத்தில் இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com