சண்டையில் கிழியாத சட்டைகூட இருக்கலாம்; சர்ச்சை இல்லாத காங்கிரஸை கண்டுபிடிக்க முடியாது! தமிழக காங்கிரஸில் லேட்டஸ்ட் புகைச்சல், மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக!
தமிழகத்தின் சீனியர் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், அரசியலுக்கு அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி தனது அரசியல் வாழ்வின் பொன்விழாவாக அதனை கொண்டாட முடிவெடுத்தார் அரசர்! ஜூலை 13-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் அந்த விழா நடைபெற இருக்கிறது.
அண்மையில் திருநாவுக்கரசரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் அனைவரும் இந்த விழாவுக்கு அதிக தொண்டர்களை திரட்டி வரும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். தவிர, தமிழக காங்கிரஸில் மாநில நிர்வாகப் பதவிகளை குறிவைத்து காய் நகர்த்துகிறவர்களும் அரசரை ‘ஐஸ்’ வைப்பதற்காகவே இந்த விழாவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம்.
முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் தலைமையில் இதற்காக ஒரு விழாக் குழுவும் இயங்குகிறது. ஆனாலும் இப்படியொரு விழா நடைபெறுவதை அதிகமாக விளம்பரப்படுத்தாமல், கமுக்கமாகவே வைத்திருக்கிறார்கள். காரணம், கட்சிக்குள்ளேயே இந்த விழா தொடர்பாக எழுந்திருக்கும் புகைச்சல்தான்.
இது தொடர்பாக முன்னாள் மாவட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், “காங்கிரஸில் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி என இவரைவிட சீனியர் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத் தலைவர்களாக இருந்தபோது நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விழா எடுத்தார்களே தவிர, தங்களை எதிலும் முன்னிறுத்தவில்லை.
அதுவும் ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்ததினம் வருகிற சூழலில், அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக இவரது பெயரில் விழா எடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. காமராஜரை விட தன்னை முக்கியமானவராக திருநாவுக்கரசர் கருதுகிறாரா?” என கேள்வி எழுப்பினார் அந்த முன்னாள் நிர்வாகி.
மாற்றுக் கட்சிப் பிரமுகர்கள் பலரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்மையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டமன்ற வைரவிழா நடத்தியதுபோல, தனக்கு இந்த விழா மூலமாக அரசியல் முக்கியத்துவத்தை உருவாக்கும் முயற்சியில் அரசர் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் காங்கிரஸின் மற்ற கோஷ்டி தலைவர்கள் இந்த விழாவுக்கு வருவார்களா? என்பதுதான் இந்த நிமிடம் வரை மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு நிர்வாகிகள் வருவதில்லை என முடிவெடுத்துவிட்டார்கள். ப.சிதம்பரம் உள்ளிட்ட சிலரும் வரும் வாய்ப்பு இல்லையாம்.
“தமிழகத்தை பொறுத்தவரை இங்குள்ள தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல் செய்ய முடியாது. எனவே மேலிட ஒப்புதலுடன்தான் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ராகுல்காந்தி அறிவுறுத்தலின்படி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான முகுல்வாஸ்னிக்கே இந்த விழாவுக்கு வருகிறார்!” என்கிறார்கள், அரசருக்கு நெருக்கமானவர்கள்!