Advertisment

‘சாதீயக் கோட்டை தகர்கிறது’ : மார்கழி இசைவிழாவை தொடங்கி வைக்கும் இளையராஜா

சென்னை இசைவிழாவை இந்த ஆண்டு இசைஞானி இளையராஜா தொடங்கி வைக்கிறார். இதன் மூலமாக சாதீயக் கோட்டை தகர்வதாக கூறுகிறார் டி.என்.கோபாலன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IsaiGnani IlayaRaja, Karnatic Music, Chennai Music Academy, Gopalan TN, Chennai Music Function

சென்னை இசைவிழாவை இந்த ஆண்டு இசைஞானி இளையராஜா தொடங்கி வைக்கிறார். இதன் மூலமாக சாதீயக் கோட்டை தகர்வதாக கூறுகிறார் டி.என்.கோபாலன்.

Advertisment

சென்னை இசைவிழா குறித்து மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் வெளியிட்ட பதிவு இது...

‘சென்னை மியூசிக் அகடெமியின் இந்த ஆண்டு இசைவிழா நிகழ்ச்சிகளை இளையராஜா துவக்கிவைக்கிறார். செய்தியை எனக்குச் சொன்னது, வழக்கம்போல் கோலப்பன் பகவதி!

எனக்கு உற்சாகம் பொங்குகிறது. கர்நாடக இசை உலகில் இன்னுமொரு உளத்தடை உடைந்து நொறுங்குகிறது.

இதே அவையில் அழைக்காமலே வந்து செம்மங்குடி சீனிவாசய்யரின் சதாபிஷேகத்திற்கு வந்து கனகாபிஷேகம் செய்தது இன்னமும் எனக்கு எரிச்சல். ஆனால் இப்போது இசை ஞானிக்கு கர்நாடக இசை உலகு முடி சூட்டி தன்னையும் கவுரவித்துக்கொள்கிறது. இதை நாம் மனதார வரவேற்கவேண்டும்.

(இசைவேளாளர் தவிர) ஏறத்தாழ பிராமணர்களுக்கு மட்டுமே என்றிருக்கும் ஓர் இசை மரபு; அதனைப் போற்றிப் பாதுகாக்கவென்றே உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் அமைப்பு; அது இளையராஜா தங்களுக்கு மட்டுமான இசைக்கும் இவர் ராஜா என்று ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரை அழைப்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி.

தலித் என்று தன்னை அழைத்துக்கொள்ள ராஜா கூசினாலும் அவர் சாதி பின்புலத்தை மறக்கவியலாது. இப்போது அவருக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தலித் என்பதால் அல்ல இசை மேதைமையால் என்பதை நினைக்கும்போது நாம் இன்னமும் அதிகமாக பெருமைப்படலாம்.

நான் பத்திரிகையாளன் என்ற வகையில் இந்து குழுமத்தைச் சேர்ந்த முரளி தலைவராக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு திருப்பம் என்பதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி. கர்நாடக இசையினை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டு வரும் டி எம் கிருஷ்ணாவையும் இந்நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கவேண்டும். ஆனால் அழைக்கமாட்டார்கள் வேறு கதை. கிருஷ்ணாவும் மகிழ்ச்சியடையலாம், இன்னொரு சாதீயக் கோட்டை தகர்க்கப்படுகிறதென.

சினிமா இசையாயிருந்தாலும் அதிலும் கர்நாடக இசையின் சிகரங்களை ஞானி தொட்டிருக்கிறார் என்கிறார் கோலப்பன். அவரது பதிவினை கீழே பகிர்ந்திருக்கிறேன்...

‘சென்னை சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலாநிதி விருது 1988-ஆம் ஆண்டு T.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது. அவர் பாலசரஸ்வதியின் சகோதரர். அன்று அவர் ஆற்றிய உரையில் கணிசமான ஒரு பகுதியை திரைப்பட இசை குறித்து பேசுவதற்கு ஒதுக்கினார். திரையிசை என்றாலே ஏதோ ஏற்கத்தக்கதல்ல என்று கருதுவோர் மத்தியில் அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.

சரியாக 29-ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இசை விழாவைத் தொடங்கி வைக்கிறார் இசைஞானி இளையராஜா. இப்போதும் சில முனு முனுப்புகள். நீதிபதிகளும் விஞ்ஞானிகளும் தொடங்கி வைக்கும் போது இசைஞானியை விட பொருத்தமான ஒரு நபர் கிடைப்பாரா என்பதே நமது வாதம்.

கர்நாடக இசை உலகில் கோலோச்சியவர்கள் எல்லோருமே திரைப்படங்களிலும் பங்கெடுத்தவர்கள்தான். பாபநாசம் சிவன் திரைப்படங்களுக்கு எண்ணற்றப் பாடல்களை எழுதியிருக்கிறார். தண்டபாணி தேசிகர் நடத்தியிருக்கிறார். ஜி.என். பாலசுப்பிரமணியம் பாடி நடித்திருக்கிறார். அவர் பாடிய மரகதவல்லிம் குறித்து சிலாகித்து இன்றும் பேசுகிறோம். ஆனால் மூன்று நிமிடத்தில் சகுந்தலா படத்தில் அவர் பாடிய விருத்தத்துக்கு இணையது.

எம்.எல். வசந்தகுமாரியும் எம்.எஸ். சுப்புலட்சமியும், டி.கே. பட்டம்மாளும் மதுரை சோமுவும் பாலமுரளிகிருஷ்ணாவும். என். சேஷகோபாலனும் திரைத்துறையில் பணியாற்றியவர்கள்தான். ஒரு காலக்கட்டத்தில் திரைப்படங்களில் பாடல்களே கர்நாடக மெட்டுகளில்தான் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் கர்நாடக மெட்டுகளில் போடப்பட்ட பாடல்களே அதிகமாகக் காலத்தை கடந்து நிற்கின்றன.

மன்னவன் வந்தானடி பாடல் கல்யாணி இராகத்தில் இருக்கும் எந்தக் கீர்த்தனைக்கும் குறைந்ததல்ல. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் மெட்டமைக்கப்பட்ட சண்முகப்பிரியாவை அனுபவிக்காத செவி என்ன செவியோ? வீரபாண்டியகட்டபொம்மன் படத்தில் வரும் வெற்றிவடிவேலனே என்ற பாடல் ஒலிக்கும் குறிஞ்சி இராகத்துக்கு மயங்காதார் உண்டா?

ஜி. இராமநாதனும் கே.வி. மகாதேவனும் நடத்திய இராகபாட்டையை மற்றொரு தளத்துக்கு எடுத்து சென்றார் இளையராஜா. அவர் கையாண்டிருக்கும் மாயாமாளவகௌளைக்கும் வசந்தாவுக்கும் சண்முகப்பிரியாவுக்கும் காலமெல்லாம் இசை உலகம் கடமைப்பட்டுள்ளது. எழுதுவதற்கு இடமும் பத்தாது. எனக்கு அறிவும் போதாது.

சலநாட்டை என்றாலே கோட்டீஸ்வர ஐயரின் ஏதையா கதிதான் நினைவுக்கு வரும். அதை இளையராஜா கையாண்டிருக்கிறார்.’

 

Isaignani Ilayaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment