ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 100வது ராக்கெட் இன்று (ஜன.29) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். எல் 1, எல் 5, எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் வசதிகளுடன் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
இன்று காலை 6.23 மணிக்கு கவுண்டவுடன் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் என்விஎஸ்-02 (NVS-02) என்ற செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது. இந்த என்விஎஸ்-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோளுடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் எனவும், பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை வழங்கும் எனவும் இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் என்விஎஸ்-02 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 5.23 மணிக்கு தொடங்கி ராக்கெட் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
ISRO marks 100th mission with successful launch of navigation satellite
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், "ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
100 ராக்கெட்டுகளை ஏவியதன் மூலம் 548 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளோம். 548 செயற்கைக்கோள்களில் 438 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஆகும். 6 தலைமுறை ராக்கெட்டுகளை இதுவரை ஏவியுள்ளோம்.
சந்திரயான், ஆதித்யா போன்றவை இஸ்ரோவின் முக்கியமான சாதனைகள் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது முதல் ராக்கெட்டை 1979 ஆக.10-ம் தேதி விண்ணில் ஏவியது. 1979-ம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 என்ற ராக்கெட்டை சோதனை முறையில் இஸ்ரோ விண்ணில் ஏவியது" என்றார்.
இஸ்ரோவைப் பொறுத்தவரை, இந்த ஏவுதல் ஒரு தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அதன் முன்னேற்றத்தின் அடையாளமாகும், இது உலகின் உயரடுக்கு விண்வெளி நிறுவனங்களிடையே அதன் இடத்தை உறுதிப்படுத்துகிறது.