என் முகத்தை பார்க்க தைரியம் கொடுத்த போலீஸ் அண்ணாவுக்கு நன்றி : ஐடி ஊழியர் லாவண்யா உருக்கம்!
கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் லாவண்யா முழுவதுமாக குணமடைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கடந்த 2 மாதங்களுக்கு சென்னை பள்ளிக்கரணையில் இரவு வேலை முடிந்து விட்டு சென்ற லாவண்யா என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். லாவண்யாவின் முகம் மற்றும் கை, கால்களை இரும்பு கம்பியால்…
கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் லாவண்யா முழுவதுமாக குணமடைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கடந்த 2 மாதங்களுக்கு சென்னை பள்ளிக்கரணையில் இரவு வேலை முடிந்து விட்டு சென்ற லாவண்யா என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். லாவண்யாவின் முகம் மற்றும் கை, கால்களை இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் இருந்த நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு லாவண்யாவை உட்புதரில் வீசி சென்றனர்,
இரத்த வெள்ளத்தில் கிடந்த லாவண்யா, உட்புதரில் இருந்து தானாகவே எழுந்து வந்த சாலையோரத்தில் விழுந்து கிடந்தார். அதன் பின்பு, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினர், அவர் தந்த தகவலின் அடிப்படையில் இரண்டே நாட்களில் கொள்ளையர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லாவண்யா, தனது தன்னம்பிக்கை மூலம் மீண்டு வந்தார். அவரின் தைரியத்தை கண்டும் பலரும் அவரை வீரப் பெண் என்று புகழ்ந்தனர்.திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சென்று லாவண்யாவை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், இன்று லாவண்யா சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்தார். நேரில் வந்து தனது உதவிய காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
“அனைவருக்கும் வணக்கம். முதலில் நான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். என்னை தைரியமான பெண், வீரமான பெண் எல்லாம் புகழ்கிறார்கள் அவை எல்லாவற்றிற்கும் காரணம் நான் மட்டுமில்லை. என்னால் முடியும் என்று என்னை ஊக்கப்படுத்தியவர்களும் (போலீஸ், குடும்பத்தினர்) தான். கொள்ளையர்களை கண்டுப்பிடித்து சிறையில் அடைந்த காவல் துறையினருக்கு நன்றி. மீடியா நண்பர்களுக்கும் நன்றி.
பலரும் எனக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து வருந்துகிறார்கள். ஆனால் உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுப் போன்ற சம்பவம் மட்டும் எனக்கு நேராமல் இருந்திருந்தால் எனக்குள் இருக்கும் தைரியம் கடைசி வரை எனக்கு தெரியமாலேயே போயிருக்கும். இந்த சம்வத்தில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேனா? என்று பலரும் என்னை விசாரித்தனர். கடவுள் புண்ணியத்தில் அப்படி ஏதும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தாலும், அவர்கள் செய்த தவறுக்கு நான் என்ன செய்ய முடியும்?
ஆனால், எனக்கு நடந்த எல்லாவற்றையும் அறிந்து ஒருவர் எனக்கு வாழ்க்கை கொடுக்கவும் முன்வந்துள்ளார். சமீபத்தில் தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கடவுள் எனக்கு மற்றொரு வாழ்க்கையை தந்துள்ளதாக தான் நான் நினைக்கிறேன். என வருங்கால கணவரின் குடும்பம் என்னை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக போலீஸ் அண்ணா சிவக்குமாருக்கு மனமார்ந்த நன்றி. என்னை ரோட்டில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை முடியும் வரை என் கூடவே இருந்தார்.
கொள்ளையர்கள் தாக்கியதில் என் முகம் மிகவும் மோசமாக மாறியது. 10 நாட்கள் கழித்து நான் என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது, சிவக்குமார் அண்ணா. ”எந்த காரணத்தைக் கொண்டும் நீ முகத்தை பார்த்து பயப்படவோ, அழவோ கூடாதுனு அவ்வளவு தைரியம் தந்தார். உன் அழகு முகத்தில் இல்லை, மனதிலும் , தன்னம்பிக்கையிலும்” தான் என்று எனக்கு முழு ஆதரவாக கூடவே இருந்தார். மறக்க மாட்டேன் அண்ணா மிக்க நன்றி…. எனக்கு கடவுளிடம் பிராத்தனை செய்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி “ என்று கூறியுள்ளார்.