Tamil Nadu | மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆஜரானார்கள்.
அப்போது, அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 செப்டம்பர் 12-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில் தரகர்களாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம், அசையும் சொத்துகள், அசையா சொத்துகளை முடக்கி, பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுமார் ரூ.4,000 கோடிக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், மணல் குவாரி புகார்களை கவனிக்க தனித்துறை உருவாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தடை உச்ச நீதிமன்றத்தால் விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“