Advertisment

இப்படியே அரசியலை விட்டு வைப்பது பெரிய அவமானம் : கோவையில் கமல்ஹாசன் ஆதங்கம்

அரசியலை இப்படியே விட்டு வைப்பது பெரிய அவமானம் என்று நடிகர் கமல்ஹாசன் கோயம்புத்தூரில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டு திருமண விழாவில் பேசினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal hassan - coimbatore - political speach

அரசியலை இப்படியே விட்டு வைப்பது பெரிய அவமானம் என்று நடிகர் கமல்ஹாசன் கோவையில் நடந்த திருமண விழாவில் பேசினார்.

Advertisment

கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா கோவை ஈச்சனாரியில் நேற்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

’’எனது ரசிகர்கள் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் சிறந்த தொண்டர்களாக விளங்கி வருகிறார்கள். இவர்கள்ந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக தலைவர்கள். 30 ஆண்டுகளாக உழைத்து இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளனர்.

பொதுப்பணியில் உங்கள் வயது என்ன என்று கேட்பவர்கள், எங்களை பார்த்து ரத்ததானம், கண்தானம் எல்லாம் செய்தால் மக்கள் நம்மை மதிப்பார்கள் என்று எங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பிள்ளைகள். அவர்கள் இன்று எங்களையே எதிர்த்து பேசுகிறார்கள்.

நாங்கள் இதை செய்தோம் அதற்காக இதை தாருங்கள் என்று எனது பிள்ளைகள் இதுவரை கையை நீட்டியது இல்லை. அல்லது இதை எல்லாம் செய்ய போகிறோம், நீங்கள் இப்போது இதை செய்யுங்கள் என்றும் அவர்கள் கேட்டதும் இல்லை. எங்களை பார்த்து நீங்கள் சமுதாயத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் கோபம் வருவதில்லை, சிரிப்புதான் வருகிறது.

என்றைக்காவது ஒருநாள் அரசியலுக்கு பயன்படும் என்று நம்பியா இதை எல்லாம் நீங்கள் செய்தீர்கள். வாருங்கள் ஒருநாளைக்கு உங்களை கொண்டுபோய் கோட்டையில் சேர்க்கிறேன் என்று ஆசை காட்டியா நான் உங்களை அழைத்தேன்?. ஆனால் ஒன்று சொல்கிறேன் இப்படியே இந்த அரசியலை விட்டு வைப்பது நமக்கு பெரிய அவமானம்.

இதை மாற்ற வேண்டியது நம் கடமை. ஏனென்று சொல்கிறேன், நம் பாதையில் வரும் குண்டும்குழியும் வியாதியும், சோகமும், வறுமையும் நாம் வரவழைத்துக் கொண்டவை தான். இந்த அரசியல்வாதிகள் வேற்றுகிரகத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. உங்கள் தெருவில், உங்கள் வட்டாரத்தில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் தான்.

நான் கோபமாக சொல்கிறேன். நான் கோபப்படுவது நாம் யாரென்று மற்றவர்களுக்கு காட்டிக்கொள்வதற்காக அல்ல. நீங்கள் யாரென்று நீங்கள் தெரிந்துகொள்வதற்காக தான். அரசியல்வாதிகள் ஏன் இப்படி ஆகிவிட்டார்கள் என்று நீங்கள் வியப்படையாதீர்கள். ஓட்டுக்கு காசு வாங்கிய அன்றே நீங்கள் திருடனுக்கு அங்கீகாரம் அளித்துவிட்டிர்கள். முதலில் நீங்கள்தான் எடுத்துக்காட்டினீர்கள், இது பூட்டு, இதை உடைக்கலாம் என்று, அதைத்தான் அவர்கள் உடைக்கிறார்கள்.

அந்த கஜானாவில் இருந்து எனக்கும் கொஞ்சம் கொடு என்று நீங்கள் கேட்டதால், இன்று அந்த கஜானா காலி. அது என் சொத்து, அதை தொடாதே என்று நீங்கள் அல்லவா சொல்லியிருக்க வேண்டும். நீங்களும் அதில் பங்கு கேட்டதால், பெரும் பங்கை அவர்கள் எடுத்துக்கொண்டனர். சிறு சோற்று பருக்கையை உங்களுக்கு விட்டெறிகிறார்கள்.

அவ்வளவுதான், இந்த 5 வருடங்கள் கஷ்டப்பட வேண்டியதுதான் என்று நான் உங்களை சபிக்க வரவில்லை. செய்த தப்பை ஒப்புக்கொள்ளுங்கள். இனி அவ்வாறு செய்யாமல் இருப்போம் என்று சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் 500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கும் உங்களுடைய 5 வருடத்தை நீங்கள் விற்று விடுகிறீர்கள். அதன் விளைவு ஐநூறோ, ஆயிரமோ அல்ல, உங்கள் வாழ்க்கை.

சொத்து சேர்த்து வைத்தால் போதாது. அது வெறும் சதுர அடி நிலம். அதை குப்பைமேடாக விட்டுச் சென்றீர்கள் என்றால், எத்தனை ஆயிரம், பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்தும் பயன் இல்லை. அதை நினைவில் கொள்ள வேண்டும். களை பறிக்க வேண்டியது வயலில் மட்டுமல்ல, வாழ்விலும் தான்.

அதற்கான நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. நீங்கள் தலைவராக இருக்கிறீர்களா என்று என்னை பார்த்து கேட்கிறீர்கள். நான் உங்களை பார்த்து கேட்கிறேன், தலைமை ஏற்கும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் அதற்கான வேலையை இந்த சுபமுகூர்த்த வேளையில் தொடங்குங்கள்.

இது அரசியலில் உங்களை தூண்டிவிடும் வேலை அல்ல, உங்களின் கடமையை நினைவில் கொள்ளும் விழாவாகத்தான் நான் இந்த தருணத்தை எடுத்துக்கொள்கிறேன். என் வசதிக்காக சுயநலத்துடன் இந்த விழாவை திசை திருப்புகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம்.

இந்த நம்பிக்கையை என் மீது வைப்பதைவிட உங்கள்மீது நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள், தொடர்ந்து போராடுங்கள். சுத்தம் என்பது உங்கள் கைகளை நீங்களே கழுவிக் கொள்வதில் தான் இருக்கிறது.

நீங்கள் கொடுத்த உத்வேகத்துக்கு நன்றி. ஆனால் இதை எல்லாம் ஒரு நாள் சந்தோஷத்துக்காக மறந்து விடாதீர்கள். உங்கள் நினைவில் இதை கண்டிப்பாக வைத்துக்கொள்ளுங்கள், அதற்கான வேலையை தொடருங்கள். எப்படி தினமும் சாப்பிட வேண்டுமோ, குளிக்க வேண்டுமோ, அதுபோன்று தினமும் நமக்கு ஒரு கடமை இருக்கிறது. அதுதான் விழித்திருத்தல். அதை தினமும் செய்யுங்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment