Advertisment

வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுப்படுத்தி மிரட்ட முயல்வது கண்டனத்துக்குரியது : வைகோ அறிக்கை

அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vaiko

கவிஞர் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுப்படுத்தி மிரட்ட முயல்வது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு :

நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து ஆவார்கள். தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவையாகும். நீண்ட நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கு கருவூலமாக்கித் தரும் அவரது தமிழ்ப் பணி இன்னும் பல நூறாண்டுகளுக்குப் போற்றப்படும். தென்பாண்டிக் கடல் முத்தாக ஒளிவீசும் வைரமாக தமிழ்த் தாய்க்குக் கிடைத்த ஒப்பற்ற புகழ் அணிதான் வைரமுத்து ஆவார்.

அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் போற்றத்தகும் ஆண்டாள் அவர்களை - அவர்கள் தந்த பாடல்களை மிக உன்னதமாகச் சித்தரித்துள்ளார். ‘மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த தமிழையே ஆண்டாள்; தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள்’ என்று தலைப்பிட்டு எழுதினார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியப் பணியாற்றிவரும் ‘தினமணி’ நாளேடும் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக் கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும். ஆனால், கவிஞர் வைரமுத்து அவர்களைக் கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும், ‘தினமணி’ நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thiruppavai Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment