ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை நகருக்குள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது குறித்து வழக்கறிஞர் செர்ஜித் நயினா முகமது எனபவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ''புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்'' சொல்லியிருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் தலைமை செயலகம், அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள எழிலகம் வளாகம் போன்றவை இந்த பகுதியில் தான் உள்ளன. இவர்கள் போராட்டம் நடத்துவதால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்பு அடைகின்றனர்.
மேலும் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. எனவே ஜேக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை நகருக்குள் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் வேலை பார்க்கும் அலுவலக வளாகம், தனியாருக்கு சொந்தமான வளாகங்களில் போராட்டம் நடத்தினால் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்களுடைய கடைமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறித்திய நீதிபதிகள் வேலை நிறுத்ததில் ஈடுபடாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவார்கள் என நீதிமன்றம் நம்புவதாகவும் தெரிவித்தனர்.