தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் மூன்று மாதங்களுக்கு முன்பு வரையில் விதிமீறல் நடந்தது உண்மைதான் என்று அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
கடந்த 2003-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைத்தை ரத்து செய்த தமிழக அரசு பொதுபணித்துறை துறையின் மூலம் மணல்களை அள்ளி வருகிறது. அரியலூர், நாமக்கல், நாகப்பட்டிணம் உள்ளிட்ட 41 ஆற்றுபடகைகளில் 31 இடங்களில் பொதுபணித்துறை மணல் அள்ளி வருகிறது. இதனால் தமிழகத்தில் நீர்வளம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படதாகவும் அதனால் மணல் குவாரிகளை மூட வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமனி ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 2003-ம் ஆண்டிற்கு பின்னர் மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. அதேபோல, ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஒரு லாரி மணல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே தமிழகத்தின் நீர்நிலைகளை காத்திட அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும். அரசு திட்டங்களில் ஆற்று மணல்களை தவிர்த்து மாற்று மணல்களை பயன்படுத்த வேண்டும். 2003-ம் ஆண்டிற்கு பிறகு மணல் அள்ளுவதில் நடைபெற்ற முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.எல்.ராஜா, கே.பாலு ஆகியோர் ஆஜரானார்கள்.
ஏற்கனவே மணல் குவாரிகளில் மணல் அள்ளப்படுவது குறித்து கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையின் படி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ’’கடந்த காலங்களில் ஆற்று மணல் அள்ளவதில் விதிமீறல் நடைபெற்றது உண்மைதான். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மணல் மற்றும் கனிமவளங்களுக்கு திட்ட இயக்குனர் பதவி உருவாக்கப்பட்ட பிறகு விதிமீறல்கள் ஏதும் நடக்கவில்லை’’ என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து 3 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ’’முன்று வாரத்தில் மனு தொடர்பாக பதில் அளிக்கவும், அடுத்த ஒரு வாரத்தில் அரசின் பதிலுக்கு மனுதரார் தங்கள் விளக்கத்தை அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 22 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.