ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் தொடர்பாக ஐடி (தகவல் தொழில்நுட்பம்) நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தை, வெறும் கண்துடைப்பு என தொழிலாளர் யூனியன் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ், காக்னிசண்ட் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் சமீபகாலமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஊழியர்களை பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்கும் நடவடிக்கைகளால், ஊழியர்கள், அவர்கள் சார்ந்த குடும்பங்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி வருகின்றன.
இந்த விவகாரத்தில் தீர்வு காணும்பொருட்டு, முன்னணியில் உள்ள 20 நிறுவனங்களின் பிரதிநிதிகள், நாஸ்காம் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்களுடன். மாநில அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர், கடந்த 18ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நடவடிக்கையை, Union of IT and ITES Employees (UNITE) கண்டித்துள்ளது. இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு பேட்டியளித்த Union of IT and ITES Employees (UNITE) அமைப்பின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின் கூறியதாவது, தொழிலாளர் நலத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டுவிடும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊழியர் நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க இருந்தோம். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எங்களை அவர்கள் அனுமதிக்கவே இல்லை. இந்த கூட்டம், வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகத்தான் இருந்ததாக அவர் கூறினார்.
அவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எவ்வித முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை, ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரத்தில் அரசும் தலையிட்டது என்பதை வெளிக்காட்டவே, இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.