/indian-express-tamil/media/media_files/2025/07/28/nellai-it-employee-murder-2025-07-28-11-28-20.jpg)
நெல்லையை அதிரவைத்த ஐ.டி. ஊழியர் கொலை: திடுக்கிடும் தகவல்; விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். 28 வயது இளைஞரான அவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நோயால் அவதிப்பட்ட தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர் சொந்த ஊருக்குச் செல்வதற்காக, இருவரும் சாலையில் நடந்துவந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர், கவின்குமாருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின்குமாரை நோக்கிப் பாய்ந்துள்ளார். அதனால் அச்சமடைந்த கவின்குமார் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஆனாலும் அவரை விடாமல் துரத்திய அந்த இளைஞர் கவின் குமாரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த இளைஞர் பாளையங்கோட்டை காவல்நிலையம் சென்று சரணடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கவின்குமாரை வெட்டியவர் சுர்ஜித் என்பது தெரியவந்தது. சுர்ஜித்தின் தந்தை சரவணன் மணிமுத்தாறு பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் தாயார் கிருஷ்ணகுமாரி ராஜபாளையம் பட்டாலியன் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின்போது சுர்ஜித் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
சுர்ஜித் அளித்த வாக்குமூலத்தில், "நானும் எனது மூத்த சகோதரியும் தூத்துக்குடியில் படித்தபோது கவின்குமாரும் அதே பள்ளியில் படித்தார். அப்போது, அவர் எங்களுடன் நட்பாக பழகினார். அந்தப் பழக்கம் பள்ளி முடிந்து கல்லூரிக்குச் சென்ற பின்னரும் தொடர்ந்தது. அந்த நட்பே இருவருக்கும் இடையே காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு வந்த போதிலும் வேறு வரும் காதலிப்பதை நிறுத்தவில்லை.
நாங்கள் பலமுறை கவின்குமாரிடம் பேசியும் அவர் என் சகோதரியுடன் பழகுவதை நிறுத்தவில்லை. எனது சகோதரி சித்த மருத்துவராக உள்ளார். அவர் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள சித்த மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காகவே சென்னையில் பணியாற்றிய போதிலும் கவின்குமார் அடிக்கடி வரத் தொடங்கினார். அதை நாங்கள் கண்டித்ததால், தனது உறவினர்களுக்கு வைத்தியம் பார்ப்பது போன்று அந்த மருத்துவமனைக்கு வந்து எனது சகோதரியுடன் பேசிக் கொண்டிருப்பார். இதுதொடர்பாக எனது சகோதரரிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவரும் கண்டு கொள்ளவில்லை.
அதனால் ஆத்திரத்தில் இருந்த நிலையில், நேற்று (27-ம் தேதி) கவின்குமார் தனது தாத்தாவுடன் சித்த மருத்துவமனைக்கு வந்து சகோதரியுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டேன். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அரிவாளை மறைத்து எடுத்துச்சென்று அவர் சாலையில் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர் வந்ததும் அரிவாளால் வெட்டினேன். அதை எதிர்பார்க்காத கவின்குமார் ஓடத் தொடங்கினார். ஆனால் நான் விடாமல் விரட்டிச்சென்று அவரை வெட்டிச் சாய்த்தேன். அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்த பிறகே அந்த இடத்திலிருந்து சென்றேன். நான் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக நானே காவல் நிலையம் சென்று சரணடைந்தேன்" என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த கவினின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கைதான சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையான கவின்குமார் மற்றும் கொலை செய்த சுர்ஜித் ஆகியோர் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அதனால் ஏற்பட்ட வெறுப்பு உணர்வின் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பதால், இதை ஆணவக் கொலையாகவே கருத வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.