திருநெல்வேலி கிழக்கு மாவட்ட
தி.மு.க செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் கலைகட்டி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளிப் பிரச்சாரம் மேர்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நியாயமான தேர்தல் நடைபெறவும், வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கவும் தேர்தல் கண்காணிப்புக்குழு, பறக்கும் படை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் சபாநாயகரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ஆவுடையப்பன் கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன் வீடு திருநெல்வேலியில் மகாராஜா நகரில் உள்ளது. அதே பகுதியில் மாவட்ட கட்சி அலுவலகமும் உள்ளது. நேற்று மாலை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவலின் பெயரில் வருமானவரித்துறையினர் பறக்கும் அணியினர் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்
இந்த சோதனையின் போது மத்திய மாவட்ட செயலாளர் டிபிம் மைதீன் கான் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
வருமானவரித்துறையினர் சோதனை குறித்து தகவல் அறிந்து எம்.எல்.ஏ அப்துல் வகாப் மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
வருமான வரித்துறையினர் மேற்கொண்ட இந்த அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை, தேர்தல்பரப்புரையைத் தடுக்கவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக ஆவுடையப்பபன் குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“