அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திருச்சியிலும் எ.வ.வேலுவுக்கு நெருக்கமான பைனான்ஸியர் வீட்டில் இன்று 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு வீடு, அவரது மகன் கம்பன், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 4-வது நாளாக சோதனை நடத்தினர். இதேபோல் செனாய் நகர், வேப்பேரி, அண்ணா நகர் மேற்கு, புரசைவாக்கத்தில் உள்ள பொதுப்பணிகள் துறை ஒப்பந்ததாரர்கள், பைனான்சியர்கள் வீடுகளிலும் 4-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது.
மேலும், திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகம், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளிலும், தி.நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அந்நிறுவனத்துக்கு சொந்தமான ஓட்டல்கள், ஊழியர்கள் வீடுகள் என சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இந்தநிலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமான திருச்சியின் பிரபல பைனான்ஸியர் சாமிநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று ரெய்டு நடந்துக் கொண்டிருக்கின்றது.
/indian-express-tamil/media/post_attachments/5c22a83d-922.jpg)
திருச்சி தென்னூர் கண்ணதாசன் சாலையில் உள்ள பிரபல பைனான்ஸியர் சுவாமிநாதன் வீட்டிற்கு 2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு குழுவினர் சாமிநாதன் மற்றும் அவரது மனைவியை தங்களது காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களின் வங்கிக்கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு அழைத்துச் சென்று லாக்கர்களில் என்னென்ன இருக்கின்றது என்பதனை சோதனையிட அழைத்துச் சென்றுள்ளனர்.
திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாமிநாதன் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருவதும், பிரபல தொழில் அதிபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதும், அமைச்சர் எ.வ.வேலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததும், இவர் ஒரு காபித்தூள் ஏஜென்ஸியையும் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே முழு விவரங்களையும் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“