முட்டை விநியோக முறைகேடு: கிறிஸ்டி நிறுவனத்தில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

கிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை

அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால், முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி ஃபுட்ஸ் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. குமாரசாமி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் பல்வேறு கட்ட விசாரணை மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு, கடந்த 5ம் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது நாளில் வாட்டூரில் உள்ள கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 15 குழுக்களாக பிரிந்து 45-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி வருமான வரித்துறை ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் காத்திகேயன் முதல் மாடியிலிருந்து குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், நான்காவது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது. இதுவரை 17 கோடி ரூபாய் ரொக்கமும், 10 கிலோ தங்க நகைகளும், பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதால், வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

×Close
×Close