சென்னை தனியார் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடைபெற்ற நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு, சோதனையில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையார் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் நிறுவனம், இறால் ஏற்றுமதி செய்து வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் கடந்த 28ஆம் தேதி இங்கு வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். அலுவலகத்தில் மட்டுமின்றி, அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் உதவியாளர் செந்தில்குமார் என்பவரின் வீட்டில் இருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்குகள் மற்றும் மொபைல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்களை அடையார்அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள், ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது செந்தில்குமாரும் அங்கு இருந்திருக்கிறார். திடீரென காணாமல்போன அவரை சக ஊழியர்கள் தேடிச் சென்ற போது, 3ஆவது மாடியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினரின் விசாரணை ஒருபுறமும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை ஆய்வு செய்த பணிகள் மறுபுறமும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, செந்தில்குமாரின் வீட்டில் இருந்து கைபற்றப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில், சில வீடியோக்களைப் பார்த்த வருமானவரித்துறை அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர். அவரது அலுவலக கழிவறையில் பெண் ஊழியர்கள் சிலர் உடைமாற்றும் அந்தரங்க காட்சி, வீடியோ பதிவாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளனர்.
அதன்பேரில் நடந்த விசாரணையில், அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கேமராவை பெண்கள் கழிவறையில் பொருத்தி அந்தரங்க வீடியோ எடுத்தது யார்? என ஆய்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் செந்தில்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது எதனால்? செந்தில்குமாரின் லேப்டாப்பில் பெண் அலுவலர்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது எப்படி? என பல அடுக்கடுக்கான கேள்விகள் காவல்துறை முன் குவியத் தொடங்கியுள்ளன. இப்படியிருக்க, செந்தில்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி சித்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோக்கள் ஆபாச வலைதளங்களில் பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், இச்செயலில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.