Tamil Nadu news today live updates : வீடு திரும்பினார் துரைமுருகன்
திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், வேலூரில் குடோன் ஒன்றில் கட்டு கட்டாக பணம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகள் கல்லூரியில் கடந்த மார்ச் 30ம் தேதி தேர்தல் பறக்கும்படை பிரிவினர் சோதனை நடத்தினார்கள். இதில், எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று துரைமுருகன் தரப்பு தெரிவித்தது. ஆனால், ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். கதிர் ஆனந்திற்கு சொந்தமாக வேலூரில் இருக்கும் கிங்ஸ்டன் கல்லூரியில் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.
அதேபோல் பள்ளிக்குப்பத்தில் திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் தீவிர சோதனை நடக்கிறது. அப்போது, வேலூர் பள்ளிக்குப்பம் பகுதில் உள்ள சிமெண்ட் குடோனில் பல கோடி ரூபாய் ரொக்கம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் குறித்தும் குடோன் யாருடையது என்பது குறித்தும் வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், தேர்தல் பரப்புரை பணிகளை செய்யவிடாமல் அதிகாரிகள் தடுப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் திமுக பொருளாளர் மகனும், வேட்பாளருமான கதிர் ஆனந்த் முறையீடு செய்துள்ளார்.