சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், இன்றும் (சனிக்கிழமை) 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இன்று சுமார் 50 இடங்களில் 3-வது நாளாகவும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் தியேட்டர், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களிலும், சசிகலாவின் உறவினர்கள் விவேக், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரது வீடுகளிலும் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இவற்றுள், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தின் கீழ்த்தளத்திலுள்ள ஆலோசனை அறையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், ஜெயா டிவியின் பொது மேலாளர் நடராஜன் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஜெயா டிவி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு நேற்று நள்ளிரவு 12 மணிவரை அவரிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் அவரிடம் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.