சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்கட்சி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் வருமான வரி துறை அதிகாரிகள் இங்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு ஜெயா தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனையில் வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.
சுமார் 35-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கோடநாடு எஸ்டேட் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளனர். எஸ்டேட் பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறையையும் தீவிரமாக அவர்கள் அலசி வருகின்றனர்.
கோடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜனை ஒரு தனி அறையில் வைத்து சில அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை ஒருபக்கம் நடக்க, மறுபக்கம் மேலாளர் நடராஜனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், எஸ்டேட்டில் நேற்று இரவு பணிக்கு வந்தவர்கள் யாரையும் அதிகாரிகள் தற்போது வெளியே அனுமதிக்காமல், பங்களா உள்ளேயே வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக, இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்களையும் அதிகாரிகள் உள்ளே விடவில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக, ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியின்போது, கொள்ளையர்களால் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.