தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நெருங்கிவரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இன்று வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடந்த வாரம், திருவண்ணாமலையில் உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதோடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கெஸ்ட் ஹவுஸிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானவரித் துறை சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக செயல்பட்டு வரும் அவருடைய மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். இவர் திமுகவில் ஸ்டாலினின் நிழலாக செயல்பட்டுவருவதாக கருதப்படுகிறது. திமுகவில் உள்ள அதிகார மையங்களில் ஒருவராக இருக்கும் சபரீசனுக்கு சொந்தமான நீலாங்கரையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் உள்படம் மொத்தம் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, திமுகவின் கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். வருமானவரித் துறையினர் திமுகவினரை ரவுண்ட் கட்டி சோதனை நடத்தி வரும் நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி அண்ணாதுரை வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அண்ணாதுரை வீட்டில் சில மணி நேரங்கள் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"