எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடந்த ஐ.டி ரெய்டு முடிவு! 170 கோடி ரொக்கம் சிக்கியதாக தகவல்

செய்யாதுரையின் மூன்றவாது மகன் ஈஸ்வரனின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முன்னிலையில் உள்ள எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 36 மணி நேரமாக நடந்து வந்த வருமான வரித்துறை  சோதனை முடிவடைந்துள்ளது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த இந்த எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம், செய்யாதுரை என்பவருக்கு சொந்தமானது. அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் இவருக்கு கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், மதுரை கே.கே.நகர் , கப்பலூர், கல்லணை ஆகிய பகுதிகளில் எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.160 கோடி பணமும் 100 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை, சென்னை, மதுரை உள்ளிட்ட 50 இடங்களில் நேற்று தொடங்கிய வருமானவரி சோதனை, விடிய விடிய நீடித்தது.

இந்நிலையில், இன்று 2-வது நாளாகவும் சோதனை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, செய்யாதுரையின் மூன்றவாது மகன் ஈஸ்வரனின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது. மதுரையில் உள்ள ஈஸ்வரனின் ஹோட்டல்களில் இன்று சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி சென்னை, அருப்புக்கோட்டையில் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடந்த 36 மணி நேரமாக நடந்து வந்த வருமான வரித்துறை  சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. ரெய்டில் மொத்தமாக 170 கோடி ரொக்கப் பணமும், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close