சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசியின் மகனும், ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாக செயல் அதிகாரியுமான விவேக் மற்றும் அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லம், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் உட்பட 30 இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்கிறது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆகிய இடங்களில் கடந்த 9-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் சோதனை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். வருமான வரி சோதனை கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் இன்றும் 4வது நாளாக சோதனை தொடருகிறது.
ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் நிர்வகித்து வரும் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்த 100 வங்கி கணக்குகளும் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்கு சொந்தமானவை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, போலியான நிறுவனங்களின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீட்டிலும் இன்று 4வது நாளாக சோதனை நடைபெறுகிறது. தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை முதல் 2 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 9 மணிக்குமேல் இணை ஆணையர் தலைமையில் சோதனை நடைபெறும் என கூறப்படுகிறது.
அதேபோல், கொடநாடு பங்களாவில் இன்று 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது. சோதனையின்பொழுது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், சென்னை அருகே படப்பையில் உள்ள சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரித்துறையின் சோதனை 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. மிடாஸ் மதுபான ஆலை உள்ளே யாரும் நுழையாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா குடும்பத்தினர் வாங்கியது குறித்து சத்யம் சினிமாஸிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.