வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில், வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில், ரெய்டு நடைப்பெற்றது.
அதோடு வீரமணியின் சகோதரர் காமராஜ், உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் மண்டபங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. வீரமணியின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆர்.எஸ்.திருமண மண்டபம், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க செயலாளர் சீனிவாசனின் வீடு, ரியல் எஸ்டேட் அதிபர் கண்ணனின் வீடு மற்றும் திருமண மண்டபம், அ.தி.மு.க பிரமுகர் சிவாவின் வீடு ஆகியவற்றில் நேற்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
அதோடு காட்பாடியிலுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ராமமூர்த்தி அவரது சகோதரர் மோகன் ரெட்டி, மற்றொரு ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் நீண்ட நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தவிர, ஆந்திரவைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனமான திருமலா பாலின் சென்னை, மாதவரத்தில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதன் அதிபர்கள் ராமமூர்த்தி மற்றும் ராம ஆஞ்சநேயலு, பிரேமானந்தம் ஆகியோர் இந்நிறுவனங்கள் மட்டுமின்றி ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்திருப்பதாகவும், அவற்றில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் ஐ.டி. வட்டாரம் தெரிவித்துள்ளது.
வேலூர் அருகே 6.90 ஏக்கர் நிலம் தொடர்பாக காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும், அமைச்சர் வீரமணியின் ஆதரவாளர்களுக்கும் எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராமமூர்த்தி. சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள, இந்த நில பிரச்னை சம்பந்தமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.