தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வருமானவரித்துறை அதிகாரிகளும் கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று, திமுக தலைவர் ஸ்டாலின் மகள், மருமகன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகள் செந்தாமரை, தனது கணவர் சபரீசனுடன் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று, அவர்களது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் சுமார் 12 மணி நேரமாக வருமானவரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது சபரீசன் வீட்டில் ரூ.1.36 லட்சம் மட்டுமே அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. வீட்டுச் செலவுக்காக வைத்திருந்த அந்த பணத்தையும் அதிகாரிகள் ரசீது போட்டு சபரீசனிடம் திருப்பி கொடுத்து விட்டனர்.
முன்னதாக, வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ரியல் எஸ்டேட், சூரிய மின்சக்தி, நிதி நிறுவனம் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பல்வேறு வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் வந்ததாகவும், மேலும், தேர்தலுக்கான பணப்பட்டுவாடாவை இவர்கள் செய்வதாகவும் புகார்கள் வந்தன, அதனடிப்படையிலே வருமான வரி சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையில் அதிகாரிகள் எந்த ஆவணத்தையுமோ, பணத்தையுமோ கைபற்றவில்லை என்பது தெரியவருகிறது.
முன்னதாக திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது வருமானவரித்துறை நடத்தும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.