அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் (மே 26) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
Advertisment
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளராக இருந்து வருகிறார்.
அ.தி.மு.கவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க மேயர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இவரது மனைவி கிருபாலினி கார்த்திகேயன், தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், தொழில் நெருக்கடி காரணமாக செந்தில் கார்த்திகேயன் தி.மு.க இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் இன்று (மே 27) இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையை ஒட்டி அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கெம்பனூர் பகுதியில் காயத்ரி என்பவருக்கு சொந்தமான நீலாவதி நினைவு அபாஷா போதை மறுவாழ்வு இல்லத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல பந்தயசாலை, பீளமேடு பகுதிகளில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“