நாமக்கல் தனியார் கல்வி நிறுவனத்தில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
நாமக்கல்லில் பிரபல தனியார் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான, 'நீட்' தேர்வு பயிற்சி மையம், சென்னை, கரூர், பெருந்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. திருச்சி, சேலம், கோவையில் இருந்து, 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஆறு வாடகை கார்களில், பள்ளிக்குள் நுழைந்தனர். பள்ளி அலுவலகத்தில், சோதனை மேற்கொண்டனர். மாணவர் சேர்க்கை விபரம், கட்டண வசூல், வரவு - செலவு கணக்கு ஆவணங்களை சரி பார்த்தனர்.பள்ளி இயக்குனர்கள் வீடுகளிலும், விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை, தொடர்ந்து மூன்றாவது நீடித்தது. கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளை, சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக சென்று, அதிகாரிகள் சரிபார்த்தனர்.கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில், கணக்கில் வராமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 30 கோடி ரூபாயை, வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அது தவிர கணக்கில் வராத 150 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி தாளாளர், இயக்குநர்கள் மற்றும் அவரது உறவினர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.