கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில், தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள, வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் விபரங்களை வெளியிடவில்லை.
கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
இதனிடையே, சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்ததாக மார்ட்டின் மற்றும் மேலும் சிலர் மீது வழக்குப் பதியப்பட்டது.
மார்ட்டின் தொடர்புடைய சுமார் ரூ.451 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது. பின்னர், கடந்த மே மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன், குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் இணைந்து கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“