ஆர்.கே நகர் இடைத்தேர்தல், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை பார்த்திடாத இடைத்தேர்தல் ஆகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அவரின் தொகுதியான ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முதலில் ஏப்ரல் 12 2017ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. சரியாக ஓட்டுப்பதிவுக்கு 4 நாட்களுக்கு முன்பு பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், அப்போது டிடிவி தினகரனின் ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
இதில் ரூ.89 கோடி வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் கையெழுத்திட்டதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, எம்.எல்.ஏ.க்கள் விடுதி, சரத்குமார் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையில், ரூ.89 கோடி ரூபாய் வரை செலவு செய்தது உறுதியானது.
இதேபோல் 86 சதவீதம் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனை அறிக்கையின் பேரில் தேர்தல் ஆணையம் இடைதேர்தலை ரத்து செய்தது. சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்ற விசாரணையில் பணம் வினியோகம் செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானது.
தமிழக அரசியலில் இந்த 89 கோடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போன்ற பல தலைவர்களும் இதுக் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
அதன் பின்பு, இரண்டாக பிரிந்து இருந்த அதிமுக ஒன்றாக சேர்ந்தது. ஒபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்ததால் முதல்வர் அணியில் இருந்த விஜயபாஸ்கர், டிடிவி தினகரனை விட்டு பிரிந்தார்.
சூடு பிடிக்கும் வழக்கு:
அதன் பின்பு இந்த விவகாரம் அதிகம் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 89 கோடி பணப்பட்டுவாடா புகாரை வரிமான வரித்துறையினர் கையில் எடுத்துள்ளனர். இதுக் குறித்த விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜயபாஸ்கர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த ஆவணங்களை முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு கோப்புகளாக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த விவகாரம் மீண்டும் வெடிக்குமானால், இந்த வழக்கை வழிநடத்த வருமான வரித்துறையினர் சார்பில் சிறப்பு பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.