துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு: திமுக வழக்கறிஞர் காரசார வாக்குவாதம்- வீடியோ

இதனால் அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

it ride in duraimurugan katpadi house : திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்தப் பூச்சாண்டிக்கு நான் பயப்பட மாட்டேன் என துரைமுருகன் குறிப்பிட்டார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி பேரவை காந்தி நகர் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான டி.எம். கதிர் ஆனந்தன் வீடு உள்ளது.

இந்நிலையில் வருமான வரித் துறை துணை ஆணையர் தீபன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் குழுவினர் துரைமுருகன், கதிர் ஆனந்தன் தங்கியுள்ள வீட்டில் சோதனை நடத்துவதற்காக நேற்று (29.3.19) இரவு வந்தனர். இதையறிந்த திமுகவினர் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திமுக வழக்குரைஞர்கள் அங்கு வந்து அதிகாரிகளிடம் சோதனைக்கான ஆணை குறித்து கேட்டனர். அதற்கு வேலூர் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் உத்தரவின் பேரில் சோதனை நடத்த வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் தொகுதி வேட்பாளர் அரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இருப்பதால் சோதனை நடத்தக் கூடாது என திமுக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள எந்தப் பகுதியிலும் சோதனை நடத்த அனுமதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வருமான வரித்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடந்த இந்த சோதனை இன்று காலை 8 மணிக்கு நிறைவடைந்துள்ளது. தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியின் அறிவுறுத்தலில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டதாக, திமுக நிர்வாகிகளை இதனை விமர்சித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் தொடரும் சோதனை:

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் சோதனை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஸ்தியான் பேட்டையில் உள்ள கல்லூரி பள்ளியில் தேர்தல் பறக்கும் படையும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வாணியம்பாடியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீட்டிலும், சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துரைமுருகன் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து 2 பைகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

தற்போது கூடுதலாக மேலும் 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.வரும் பாராளுமன்ற தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சோதனை குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், ‘இந்த பூச்சாண்டிக்கு நான் பயப்பட மாட்டேன். சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது. வேலூர் மக்களவை தொகுதியில் எனது மகனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் அதனை சீர்குலைக்க, எதிர்க்கட்சியும், மத்திய அரசும் சேர்ந்து இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.’ என்றார்.
துரைமுருகன் இல்லத்திற்கு வந்த அதிகாரிகளுடன் திமுக வழக்கறிஞர் பரந்தாமன் காரசாரமாக வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close