/indian-express-tamil/media/media_files/2025/10/24/iuml-dmk-alliance-2025-10-24-10-08-04.jpg)
2026 தேர்தலில் 5 தொகுதிகள் தேவை: ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் முகைதீன் பேட்டி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) கூட்டணியில், தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் வலியுறுத்தி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் பேசியதாவது;
அக்டோபர் 26 அன்று சென்னையில் உள்ள பெரியார் திடலில் மறைந்த தலைவர் அப்துல்சமது நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 8,000 மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் மாநாடு டிச.28-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. கேரளாவின் (கே.எம்.சி.சி) இஸ்லாமிய கலாச்சார அமைப்பு சார்பில், மும்மத திருமணம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் யூகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு இதுவரை செய்துள்ள பல நல்ல காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். தி.மு.க.வுடனான தங்கள் கூட்டணி என்பது தேர்தலுக்கானது அல்ல; கொள்கை ரீதியானது. என்றும் திமுகவுடன் தான் கூட்டணி; வேறு கூட்டணி பற்றி சிந்தித்ததோ, கனவுகூட கண்டதோ கிடையாது.
2026 தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அதன்படி, திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5 தொகுதிகளைத் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) இணையும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இவை ஒன்றிணைந்தால் தி.மு.க.வுக்குச் சவாலாக இருக்குமா என்று கேட்டபோது, "தேர்தலே சவாலாகத்தான் இருக்கும். பிரசாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பதுதான் கடந்த கால வரலாறு" என்று காதர் முகைதீன் பதிலளித்தார்.
சமீபத்தில் இலங்கை சென்று பிரதமர் ஹரினியைச் சந்தித்து, "தமிழக மீனவர்களைக் காக்கும் வகையில் இந்தோ-ஸ்ரீலங்கா பிஷ்ரீஸ் கார்ப்பரேஷன் என்ற அமைப்பை இரு நாடுகளும் சேர்ந்து உருவாக்கி, இரு நாட்டு மீனவர்களையும் உறுப்பினர்களாக்கி கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையை வழங்கினால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்" என்று தான் தெரிவித்ததாகக் காதர் முகைதீன் கூறினார். இதையடுத்து இலங்கை பிரதமர் டெல்லியில் இந்திய அதிகாரிகளிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us