J Anbazhagan's Vijay Fan Moment: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62 வயது) இன்று காலை காலமானார்.
அதிக வசூல் செய்த 5 தமிழ் படங்கள்: ஓடிடி தளங்களில் தாராளமாகப் பார்க்கலாம்!
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த அன்பழகன், தி.மு.க. கட்சிப்பணிகளில் தீவிரமாகப் பணியாற்றியவர். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2001-ல் தி.நகரிலும், 2011, 2016-ல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.
சச்சின் - தோனியின் தீவிர விசிறி
அரசியல் தவிர, கிரிக்கெட், கால்பந்து, சினிமா ஆகியவற்றிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். அதிலும் சிஎஸ்கே அணிக்கு இவர் தீவிரமான விசிறி என்பவர் குறிப்பிடத்தக்கது. பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் யாரும் பெரிய அளவில் விளையாட்டு மற்றும் சினிமாவில் வெளிப்படையாக ஆர்வம் காட்டியது கிடையாது. ஆனால் ஜெ. அன்பழகன் அப்படி இல்லை. கடந்த வருடம் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்த போதுதான் ஜெ. அன்பழகன் கிரிக்கெட் ரசிகர் என்று பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் அவர் கிரிக்கெட் ரசிகர் என்பதையும் தாண்டி, மிக சிறந்த கிரிக்கெட் வல்லுநர். உதாரணமாக உலகக் கோப்பை செமி பைனல் போட்டிக்கு எந்த அணிகள் செல்லும் என்பதை மிக சிறப்பாக தொடரின் தொடக்கத்திலேயே கணித்தவர்தான் ஜெ. அன்பழகன்.
இவர் மிக தீவிரமான தோனி விசிறி என்பதும் குறிப்பிடத்தக்கது. எனக்கு தோனி மிகவும் பிடிக்கும், சச்சினின் மிக தீவிரமான விசிறி நான் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கடந்த உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து அன்பழகன் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர் தமிழக வீரர் என்பதற்காக சொல்லவில்லை. அவர் சிறந்த விக்கெட் டேக்கர். இங்கிலாந்து பிச்சில் நன்றாக பவுலிங் செய்ய கூடியவர் என்று கூறினார்.
ஜெ.அன்பழகன் விஜய் ஃபேன் மொமெண்ட்
ஜெயம் ரவியின் ’ஆதிபகவன்’ படத்தை தனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தயாரித்தவர், சுந்தீப் கிஷனின் ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தை விநியோகித்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான அவர், அவரது ஒவ்வொரு படத்தின் டீசர் / ட்ரைலர் / பட வெளியீட்டின் போதும் தனது அன்பையும், ஆதரவையும் இணையம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.
‘தலைவா’ பட வெளியீட்டின் போது, ஆளுங்கட்சியான அதிமுக படத்தை வெளியிட விடாமல் பிரச்னை செய்தது. அப்போது, படக்குழுவினர் சம்மதித்தால், தனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் கடந்த வருட பிறந்தநாளில், தனது ரெக்கார்டுகளை தானே முறியடிப்பவர் என நடிகர் சதீஷின் ட்வீட்டை அமோதித்து பதிலளித்திருந்தார். மெர்சல் டீசர், திரைப்பபடம் ஆகியவற்றைப் பார்த்து விஜய்யையும், படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார். ’பைரவா’ படத் தலைப்பையும், டீசரையும் வெகுவாக பாராட்டியிருந்தார். ’கத்தி’ டீசர் வெளியான போது, அந்த சுரங்க ஷாட்டை பார்ப்பதற்காக, தனது ஃபோனை 360 டிகிரி திருப்பியதாகக் குறிப்பிட்டிருந்தார். ’மெர்சல்’ படத்திற்கு ட்விட்டரில் ஸ்பெஷல் எமோஜியை அறிமுகப்படுத்தியபோது, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். வருடம் தவறாமல், விஜய்யின் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து வந்தார்.
இப்படி விஜய்யின் தீவிர ரசிகராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவு, அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.