மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற அரசுடைமை ஆக்கப்பட்டதை உச்ச நீதிமன்ற் ரத்து செய்து உத்தரவிட்டதோடு, ஜெயலலிதவின் அண்ணன் மகன்கள் வாரிசு என்று அறிவித்தது. இதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவும், அண்ணன் மகன் தீபக்கும் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அப்போது அட்சியில் இருந்த அதிமுக அரசு ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசுடமையாக்கியது. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவருடைய அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் இருவரும் தாங்கள் வாரிசுகள் என்று வேதா இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 2 வாரங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என்றும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவருடைய அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் இருவரும் வாரிசுகள் என்றும் 3 வாரங்களுக்குள் வேதா இல்லத்தின் சாவியை அவர்களிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தீபாவும் தீபக்கும் வரவேற்றனர். அதே நேரத்தில், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜெ. தீபா, ஜெ. தீபக் இருவரும் வேதா இல்லம் சாவியைப் பெறுவதற்காக இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். சென்னை மாவட்ட விஜயராணி வேதா இல்லத்தின் சாவியைத் தீபா மற்றும் தீபக்கிடம் அளித்தார்.
ஜெயலலிதாவின் வேதா இல்லம் சாவி ஒப்படைக்கப்பட்டது குறித்து ஆட்சியர் விஜயராணி கூறுகையில், “நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து இருந்தனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில், இன்று போயஸ் கார்டன் வேதா இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது” என்றார்.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியைப் பெற்றுக்கொண்ட ஜெ தீபா ஊடகங்களிடம் கூறுகையில், மகிழ்ச்சியை வார்த்தைகளில் எல்லாம் சொல்ல முடியாது. இதை மகிழ்ச்சி என்றுகூட சொல்ல முடியாது. எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் அத்தையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். அந்த வீட்டுக்குள் நான் போககூடாது என்று எதிர்ப்பு இருந்த நிலையில் பெரிய போராட்டத்துக்கு பிறகு இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சி. இது அவர்களுடைய (ஜெயலலிதா) ஆசிர்வாதம். அங்கே சென்று பார்த்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். நான் அங்கேதான் வசிப்பதற்கு முடிவு செய்திருக்கிறேன். எப்போது அங்கே குடியேறப் போகிறேன் என்பதை பின்னால் கூறுகிறேன்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஜெ தீபாவும் ஜெ தீபக்கும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு சென்றனர். ஜெயாலிதாவின் மறைவுக்கு பிறகு, பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த வேதா இல்லம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில், ஜெயலலிதாவின் வாழ்ந்த வேதா இல்லம் திறக்கப்பட்டது. தீபா மற்றும் தீபக் இருவரும் வேதா இல்லத்தை திறந்து ஜெயலலிதா வாழ்ந்த வீட்டுக்குள் சென்றனர்.
பின்னர், வேதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு ஜெ. தீபாவும் ஜெ. தீபக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.